கரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சனிப்பெயர்ச்சி விழா திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்


கரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சனிப்பெயர்ச்சி விழா திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்
x
தினத்தந்தி 28 Dec 2020 6:50 AM IST (Updated: 28 Dec 2020 6:50 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சனிப்பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கரூர்,

கரூரின் மையப்பகுதியில் புகழ்பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று அதிகாலை 5.22 மணிக்கு சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நவ கிரஹமூர்த்திக்கும், சனீஸ்வர பகவானுக்கும் பால், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டன.

பின்னர் அதிகாலை 5.22 மணிக்கு தீபாராதனை எனப்படும் பெருஞ்சுடர் ஒளி காண்பிக்கப்பட்டது. இதனையொட்டி கோவில் நடை திறக்கும் முன்பே மார்கழி பனியையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று சனி பகவானை வழிபட்டு சென்றனர். மேலும் மிதுனம், துலாம், தனுசு, மகரம், கும்பம் உள்ளிட்ட ராசிக்காரர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

இதேபோன்று கரூர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள கல்யாணசுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள சனிபகவானுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குளித்தலை

குளித்தலை கடம்பவனேசுவரர் கோவிலில் நேற்று அதிகாலை சனி பகவானுக்கு பல்வேறு பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் காலை 8 மணிக்கு பிறகு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் வரிசையாக நின்று தங்களது ராசி, நட்சத்திரத்திற்கு சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பலர் எல், நல்லெண்ணை கொண்டு விளக்கு ஏற்றி வழிபட்டனர்.அதுபோல குளித்தலை அய்யப்பன் கோவிலில் சனிப்பெயர்ச்சியையோட்டி சிறப்பு ஹோமம், அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர் சிறப்பு அர்ச்சனைகள் செய்து சாமியை வழிபட்டனர்.

வேலாயுதம்பாளையம்

வேலாயுதம்பாளையம் அருகே ேமகபாலீஸ்வரர் கோவிலில் சனிபகவானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

மண்மங்கலம் மணிகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள தனிசனீஸ்வரர் கோவிலில் யாகம் வளர்க்கப்பட்டது. இதில் தனுஷ், மகரம், கும்பம், மிதுனம், கடகம், துலாம் ஆகிய ராசிக்காரர்கள் கலந்து கொண்டு பரிகார பூஜைகள் செய்தனர்.

இதேபோல், வேலாயுதம்பாளையம் மகா மாரியம்மன் கோவில், நாணப்பரப்பி மாரியம்மன் கோவில், தளவாப்பாளையம் மாரியம்மன் கோவில்களில் நவகிரகத்துடன் உள்ள சனி பகவானுக்கம் சிறப்பு பூஜைகள் நடந்தன.

தோைகமலை

தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட ஆர்டிமலையில் பிரசித்தி பெற்ற விராச்சிலை ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள சனிபகவானுக்கு கோவில் அர்ச்சகர் கந்தசுப்பிரமணியன், வேதரத்தினசிவம் ஆகியோரின் தலைமையில், மஞ்சள், குங்குமம், திருமஞ்சனம், தேன், பன்னீர் போன்ற சிறப்பு பொருள்களால் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதில், மணப்பாறை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன. இதேபோல் தோகைமலையில் உள்ள அனைத்து சனிபகவானுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.

ஸ்ரீமகாபுறுக்கண் மாரியம்மன் கோவில்

கரூர் அரசு காலனியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமகாபுறுக்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனீஸ்வரபகவான் 3 தேவிகளுடன் உள்ளார். இந்தநிலையில் நேற்று சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியானார். இதையடுத்து சனிபகவானுக்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு 108 சங்காபி‌‌ேஷகம் உள்பட பல்வேறு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அதிகாலை சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story