பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடைக்கு காத்திருக்கும் மஞ்சள் குலைகள்


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடைக்கு காத்திருக்கும் மஞ்சள் குலைகள்
x
தினத்தந்தி 28 Dec 2020 8:50 AM IST (Updated: 28 Dec 2020 8:50 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் அறுவடைக்காக மஞ்சள் குலைகள் காத்திருக்கின்றன.

நெல்லை,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 14-ந் தேதி அதாவது தை மாதம் 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில் விவசாயிகளுக்காக அயராது சுழன்று கொண்டிருக்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விளைபொருட்களை படையலிட்டு வழிபடுவது வழக்கமாகும்.

பொங்கல் அன்று அதிகாலையில் பொங்கலிட்டு, கரும்பு, மஞ்சள் குலை ஆகியவற்றை படைத்து அனைத்து வகை காய்கறிகளுடன் உணவு தயாரித்து சூரியனுக்கு படைத்து விவசாயிகள் மகிழ்வார்கள்.

விளைச்சல் அமோகம்

அதற்கு தேவையான கரும்பு மற்றும் மஞ்சள் செடிகளை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டு வளர்த்து உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கரும்புகளும், மஞ்சள் குலைகளும் பயிரிடப்பட்டு உள்ளது.

நெல்லை பகுதியில் அருகன்குளம், பொட்டல், டவுன் பாறையடி ரோடு மற்றும் மேலச்செவல் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மஞ்சள் செடிகளை பயிரிட்டு வளர்த்து உள்ளனர். சுமார் 200 ஏக்கருக்கு மேல் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட மஞ்சள் செடிகள் தற்போது நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இவற்றை பொங்கலுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாக மஞ்சள் குலையுடன் மண்ணை விட்டு எடுத்து விற்பனை செய்ய உள்ளனர்.

விலை இல்லை

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "நெல்லை மாவட்டத்தில் நெல், வாழையே பிரதானமாக பயிரிடப்படுகிறது. கரும்பு, மஞ்சள் சாகுபடியில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்தாண்டு விளைச்சல் நன்றாக உள்ளது. இருந்தாலும் மஞ்சள் குலை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. அப்படியே வந்தாலும் மிக குறைந்த விலைக்கே கேட்கின்றனர். தமிழக அரசு தற்போது வழங்க இருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன், மஞ்சள் குலையும் வழங்கினால் நன்றாக இருக்கும். விவசாயிகளிடம் மஞ்சள் குலையை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆண்டே 2,500 ரூபாய், அரிசி, கரும்பு துண்டுடன் மஞ்சள் குலையும் அரசு வழங்கினால் விவசாயிகளுக்கு பெரிய உதவியாக இருக்கும்" என்றனர்.

Next Story