தஞ்சையில் 774 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வைத்திலிங்கம் எம்.பி. வழங்கினார்


தஞ்சையில் 774 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வைத்திலிங்கம் எம்.பி. வழங்கினார்
x
தினத்தந்தி 28 Dec 2020 10:43 AM IST (Updated: 28 Dec 2020 10:43 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் 774 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை வைத்திலிங்கம் எம்.பி. வழங்கினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை கல்லுக்குளத்தில் உள்ள புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழகஅரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு கலெக்டர் கோவிந்தராவ் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமகிரு‌‌ஷ்ணன் வரவேற்றார். விழாவில் வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

2001-ம் ஆண்டு ஜெயலலிதாவால் மாணவிகளுக்காக கொண்டு வரப்பட்டு, பின்னர் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவிகள் வீட்டில் இருந்து பள்ளிக்கு வரும்போது ஏற்படும் சிரமத்தை குறைக்கவும், இடையில் படிப்பை நிறுத்திவிடுவதை தவிர்க்கவும் சைக்கிள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கல்வி

தங்களது அறிவை கல்வி மூலம் வளர்த்து கொண்டதால் ஐ.ஏ.எஸ். அதிகாரி, டாக்டர்கள், பாடலாசிரியர்கள், அறிவுஜீவிகள் உருவாகின்றனர். உன் உணர்ச்சிகள் என்ன என்பதை சொற்கள் காட்டுகின்றன. உன் சொற்களை வைத்து உனது செயல்பாடு மதிக்கப்படுகின்றன. உன் செயல்பாடு தான் வாழ்க்கை தரத்தை நிர்ணயம் செய்கிறது என சாக்ரடீஸ் சொன்னார்.

கல்வி தான் ஒருவனை நல்வழிப்படுத்துகிறது. அந்த கல்வியை பயின்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி அனைவருக்கும் ஒரே கல்வி என்ற முறையில் தான் சைக்கிள் வழங்கும் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். இந்த திட்டங்களை பயன்படுத்தி வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

774 பேருக்கு சைக்கிள்

விழாவில் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 360 பேருக்கும், அரண்மனை வளாகத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 286 பேருக்கும், மேம்பாலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 28 பேருக்கும், தென்கீழ்அலங்கம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 51 பேருக்கும், அண்ணாநகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 49 பேருக்கும் என மொத்தம் 774 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

விழாவில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மாவட்ட பால்வளத் தலைவர் காந்தி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், மொத்த கூட்டுறவு பண்டக சாலை தலைவர் பண்டரிநாதன், கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் அறிவுடைநம்பி, துணைத் தலைவர் ரமே‌‌ஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story