சின்னமனூர் அருகே குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
சின்னமனூர் அருகே குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் நேற்று சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சின்னமனூர்,
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் பிரசித்திபெற்ற சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க தேனி மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்தநிலையில் நேற்று சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற்றது. அப்போது சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். இதையொட்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
அந்த வகையில் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் நேற்று சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு வேதிகா அர்ச்சனை மற்றும் யாக வேள்வி நடத்தப்பட்டது. பின்னர் 5 மணி அளவில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. அப்போது சாமிக்கு மகா தீபாராதனையும், அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி தேனி, சின்னமனூர், போடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குச்சனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
பெரியகுளம் தென்கரை வரதராஜ பெருமாள் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணி முதல் கலச பூஜை, திருமஞ்சனம், விசேஷ அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பரிகார பூஜை மற்றும் அர்ச்சனை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அண்ணாதுரை மற்றும் கோவில் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.
பெரியகுளம் காளஹத்தீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதன்பின்பு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இதேபோல் போடி சீனிவாசப்பெருமாள் கோவிலில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், சனி பகவானுக்கு சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story