பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான திருத்தம் செய்யப்பட்ட பாடதிட்டத்தை உடனடியாக வெளியிட வேண்டும் - சங்க மாநில தலைவர் வலியுறுத்தல்
பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான திருத்தம் செய்யப்பட்ட பாடதிட்டத்தை அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று சங்க மாநில தலைவர் ராமு வலியுறுத்தி பேசினார்.
திண்டுக்கல்,
நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயக்கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி தலைவி செலின்ராஜகுமாரி அனைவரையும் வரவேற்றார்.
வடமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணிச்சாமி உள்பட பலர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். கூட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் ராமு பேசியதாவது:-
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கியது வரவேற்கத்தக்கது என்றாலும் அதனை 10 சதவீதமாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 2004-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு பணிவரன்முறை செய்வதுடன், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான திருத்தப்பட்ட பணிமூப்பு பட்டியலையும் விரைவில் அரசு வெளியிட வேண்டும்.
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு திரும்ப பெற வேண்டும். ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை இணையதளம் மூலம் நடத்த வேண்டும்.
பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு திருத்தம் செய்யப்பட்ட பாடதிட்டத்தை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்களை விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மகேந்திரன், அமைப்பு செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின்படி மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 9 மாணவர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story