ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தே.மு.தி.க. 5 தொகுதிகளில் போட்டியிடும் ஆலோசனை கூட்டத்தில் எல்.கே.சுதீஷ் பேச்சு


ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தே.மு.தி.க. 5 தொகுதிகளில் போட்டியிடும் ஆலோசனை கூட்டத்தில் எல்.கே.சுதீஷ் பேச்சு
x
தினத்தந்தி 28 Dec 2020 9:17 PM IST (Updated: 28 Dec 2020 9:17 PM IST)
t-max-icont-min-icon

தே.மு.தி.க. சார்பில் ராணிப்பேட்டை மாவட்ட கழக தேர்தல் ஆலோசனை கூட்டம் காவேரிப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

காவேரிப்பாக்கம், 

மாவட்ட துணை செயலாளரும், சோளிங்கர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான அத்திப்பட்டு என்.பாபு தலைமை தாங்கினார். ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பூட்டுத்தாக்கு நித்யா, மாவட்ட பொருளாளர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ. மனோகர், மாநில நிர்வாகிகள் பாலாஜி, தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவேரிப்பாக்கம் பேரூர் பொறுப்பாளர் ஞானவேல் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கழக உயர்மட்டக்குழு உறுப்பினரும், கழக துணைச் செயலாளருமான எல்.கே.சுதீஷ் கலந்துகொண்டு பேசுகையில், ‘தே.மு.தி.க. எந்த கூட்டணியில் இருந்தாலும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் போட்டியிடும்’ என்றார்.

கூட்டத்தில், தேர்தலில் கூட்டணியிலோ அல்லது தனித்தோ எந்த முடிவு எடுத்தாலும் ராணிப்பேட்டை மாவட்டம் அதற்கு கட்டுப்படும். கட்சி தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் ஆகியோரில் யாரேனும் ஒருவர் தலைமையில் கனிமவளம் கொள்ளையை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஆற்காடு ஒன்றியம் டி.சி.குப்பம் மற்றும் சோளிங்கர் ஒன்றியம் தகரகுப்பம், கரடிகுப்பத்தை அடுத்த அருந்ததிபாளையம், பொன்னப்பந்தாங்கல் ஆகிய பகுதிகளை சேர்ந்த 60 பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தே.மு.தி.க.வில் கழக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் முன்னிலையில் இணைந்தனர்.

கூட்டத்தில், முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் மோகன்குமார், ஒன்றிய செயலாளர் ராஜேஷ், அய்யம்பேட்டை ஊராட்சி செயலாளர் குணா உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் முன்னாள் பேரூர் கழக செயலாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

Next Story