திருச்சுழி அருகே வேன் கவிழ்ந்து 2 தொழிலாளர்கள் பலி 10 பேர் படுகாயம்
திருச்சுழி அருகே தனியார் மில் வேன் கவிழ்ந்து 2 தொழிலாளர்கள் பலியாயினர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காரியாபட்டி,
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள செல்லையாபுரம், ரெங்கையன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திருச்சுழி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி ஆகிய பகுதியில் உள்ள தனியார் நூற்பாலைகளுக்கு வாகனங்களில் வேலைக்கு ஆண்களும், பெண்களும் செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் திருச்சுழி அருகே செல்லையாபுரம் கிராமத்தில் இருந்து மில் வேலைக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று சென்றது.
இந்த வேனை சாத்தூர் அருகே உள்ள மயூரநாதபுரம் கிராமத்தை சேர்ந்த முனியசாமி என்ற டிரைவர் ஓட்டினார். திருச்சுழியை அடுத்த பனையூர் அருகே சென்றபோது திடீரென வேன் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் செல்லையாபுரம் கிராமத்தை சேர்ந்த பூசையா (வயது 29), ஸ்ரீகாந்த் (18) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
மேலும் ேவனில் வந்த வினிதா(21), பாக்கியலட்சுமி (25), காந்திமதி (40), விஜயகாந்த் (30), சத்யராஜ் (35), மாதவன் (18) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது அவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என கூறி உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதில் ஒருவர் மருத்துவமனையில் உள்ள ஜன்னல் கண்ணாடியை உடைத்தார். ஆதலால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் முனியசாமியை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இறந்தவர்களின் உறவினர்கள் பந்தல்குடி சாலையில் அரசு மருத்துவமனை முன்பு உயிரிழந்த இருவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயக்குமார், சகாய ஜோஸ் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story