ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்


ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்
x
தினத்தந்தி 28 Dec 2020 10:21 PM IST (Updated: 28 Dec 2020 10:21 PM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகளுக்கு தயார்படுத்தும் வகையில் அவைகளுக்கு மண் குத்தும், நீச்சல் உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அலங்காநல்லூர்,

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு விழா வருகிற ஜனவரி மாதம் 15, 16, தேதிகளில் நடை பெற உள்ளது. இந்த பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு காளை வளர்ப்பவர்கள் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர். இந்தநிலையில் பாலமேடு அருகே அய்யூர் கிராம கரந்தமலை சுவாமி, செல்லாயி அம்மன் கோவில் கிராமத்து மாடுகளுக்கு நீச்சல், நடை, பயிற்சி, மண் குத்தும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை கிராம இளைஞர்கள் அளித்து வருகின்றனர். மேலும் இந்த காளைகளுக்கு நேரத்திற்கு உணவு, தண்ணீர், தீவனம் போன்றவை வைக்கப்பட்டு பராமரித்து ஜல்லிக்கட்டுக்கு தயார் படுத்தி வருகின்றனர்.

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பிரசித்தி பெற்ற ஜல்லிகட்டுகள் மதுரை மாவட்டத்தில் தான் நடைபெறுகின்றன. வரும் தை மாதம் நடைபெறுகின்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக இப்போதே கொட்டாம்பட்டி பகுதிகளில் காளைகளும், காளையர்களும் தயாராகி வருகின்றனர். கொரோனாவால் இந்தாண்டு ஜல்லிகட்டு நடைபெறுமா என எதிர்பார்ப்பு எழுந்த வேளையில் ஜல்லிகட்டு நடத்த தமிழக அரசு கட்டுபாடுகளுடன் தளர்வு அளித்து ஜல்லிகட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட போட்டிகள் நடத்த ஆணை பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து கொட்டாம்பட்டி பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு காளை உரிமையாளர்கள் பயிற்சி அளித்து வரும் பணி மும்முரமாக ெதாடங்கி வருகின்றது. மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு, வடமஞ்சுவிரட்டு ஆகிய நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமானவை. மேலூர், கொட்டாம்பட்டி பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முன்பதிவு செய்து பங்கேற்று வருகின்றனர்.

இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை கொண்டு செல்ல பயிற்சி அளிக்கும் விதமாக காளை உரிமையாளர்கள் இப்போதே காளையை தயார் செய்து வருகின்றனர். குறிப்பாக தினந்தோறும் ஓட்டப்பயிற்ச்சி, காலை வேளையில் 10 நிமிடங்கள் நீச்சல் பயிற்சி, மண் குத்துதல் உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகின்றனர். மற்ற நாட்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 200 ரூபாய் வீதம் காளைக்கான தீவன செலவு இருக்கும்பட்சத்தில் தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கும் காரணத்தால் 400 ரூபாய் வீதம் செலவு ஏற்படுவதாகவும், இதனை ஒரு பொருட்டாக எண்ணாமல் தனது காளைக்கு தீவனம் அளித்து வருகின்றனர்.

இதற்காக காளையை அடக்குவதற்காக மாடுபிடி வீரர்கள் விரதம் இருந்து வருகின்றனர். மேலும் அவர்களும் காளைகளை வைத்து அதை அடக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி காளைகளும், காளையர்களும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Next Story