புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை; பெங்களூருவில் 144 தடை உத்தரவு; போலீஸ் கமிஷனர் கமல்பந்த் அதிரடி அறிவிப்பு


போலீஸ் கமிஷனர் கமல்பந்த்
x
போலீஸ் கமிஷனர் கமல்பந்த்
தினத்தந்தி 29 Dec 2020 4:06 AM IST (Updated: 29 Dec 2020 4:06 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என்றும், இதற்காக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதாகவும் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் அதிரடியாக அறிவித்துள்ளார்.

உருமாறிய புதிய வைரஸ்
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. கர்நாடகத்திலும் கொரோனா பரவல் இருந்து வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்தில் இருந்து பெங்களூருவுக்கு 1,500-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். அவர்களில் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அவர்களுக்கு உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) தான் தெரியவரும்.

இதற்கிடையில், கர்நாடகத்தில் கடும் குளிர் நிலவி வருவதால் கொரோனா 2-வது அலை வரக்கூடும், இதன் மூலம் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் கொரோனா 2-வது அலையை தடுக்க கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஊரடங்கு திரும்ப பெறப்பட்டது. ஆனாலும் பெங்களூருவில் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படும் என்பதாலும், பொது இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரள்வார்கள் என்பதாலும் கொரோனா பரவலை தடுக்க புத்தாண்டு கொண்டாட அனுமதி அளிக்கப்படாது என்று ஏற்கனவே போலீஸ் கமிஷனர் அறிவித்திருந்தார்.

144 தடை உத்தரவு
மேலும் புத்தாண்டு தினத்தில் எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோட்டில் பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாடுவதற்கும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் ஒன்று திரள்வதை தடுக்க பெங்களூருவுக்கு என்று தனியாக கொரோனா விதிமுறைகள் வகுக்கப்படும் என்று போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன், மந்திரி பசவராஜ் பொம்மை தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்த நிலையில், பெங்களூருவில் புத்தாண்டை கொண்டாடுவதற்கு தடை விதித்தும், இதற்காக 144 தடை உத்தரவை பிறப்பித்தும் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். 

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை
பெங்களூருவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக அரசும், மாநகராட்சியும் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பெங்களூருவில் புத்தாண்டு தினத்தில் மக்கள் ஒன்று கூடுவதால் கொரோனா பரவ அதிக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை. பெங்களூருவில் வருகிற 31-ந் தேதி மாலை 6 மணியில் இருந்து மறுநாள் (ஜனவரி 1-ந் தேதி) காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதன் காரணமாக 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூடுவதற்கு அனுமதி கிடையாது.

பொது இடங்கள், நகரின் முக்கிய சாலைகளில் புத்தாண்டை கொண்டாடும் நோக்கத்தில் 5 பேருக்கு மேல் யாரும் சேரக்கூடாது. புத்தாண்டை கொண்டாடுவதை தவிர்த்துவிட்டு எப்போதும் போல மக்கள் பொது இடங்களில் செல்வதற்கு எந்த பிரச்சினையும் இல்லை. பொது இடங்களை தவிர்த்து தனியார் பகுதிகளில் புத்தாண்டை கொண்டாடுவதற்கு அனுமதி உள்ளது. அதாவது ஓட்டல்கள், பப்கள், மதுபான விடுதிகள், கிளப்புகள் போன்றவற்றில் புத்தாண்டை கொண்டாடலாம். புத்தாண்டை கொண்டாட திட்டமிட்டுள்ள தனியார் அமைப்புகள் கண்டிப்பாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள், விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை...
குறிப்பாக ஓட்டல்கள், மதுபான விடுதிகள், பப்களில் அரசின் உத்தரவுப்படி 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். முன்கூட்டியே வாடிக்கையாளர்களை அனுமதிக்க டோக்கன் வழங்க வேண்டும். டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஓட்டலுக்கு வர அனுமதிக்க வேண்டும். ஓட்டல், மதுபான விடுதிகளில் இருந்து புத்தாண்டை கொண்டாடுவதற்கு என்று வெளியே வரக்கூடாது. ஓட்டல்கள், மதுபான விடுதிகளில் இசை நிகழ்ச்சி, நடனம் உள்ளிட்டவைக்கு அனுமதி கிடையாது. மேலும் எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மக்கள் சேருவதற்கு அனுமதி கிடையாது.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், பொதுமக்கள் அவசர தேவைக்காக வெளியே செல்லலாம். வேலைக்கு செல்பவர்கள் எப்போதும் போல தங்களது வாகனங்களில் செல்லலாம். ஆனால் புத்தாண்டை கொண்டாடும் ஆர்வத்தில் வாகனங்களில் ஜாலியாக சுற்றி திரிவதற்கு அனுமதி கிடையாது. அவ்வாறு சுற்றி திரிபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். புத்தாண்டு தினத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதி கிடையாது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள்.

10 ஆயிரம் போலீசார்
பெங்களூரு நகரில் உள்ள முக்கிய சாலைகள், மேம்பாலங்கள் மூடப்படும். புத்தாண்டை கொண்டாடுவதற்காக விருந்து நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். பெங்களூருவில் புத்தாண்டு தினத்தில் பாதுகாப்பு பணிக்காக 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுவார்கள். வணிக வளாகங்கள், ஓட்டல்கள், மதுபான விடுதிகளில் போலீசாரின் விதிமுறைகள், தீயணைப்பு துறையின் விதிமுறைகள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஓட்டல்கள், பிற பகுதிகளில் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கட்டாயமாகும்.

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது தேசிய பேரிடர் மேலாண்மை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். நகர் முழுவதும் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக போலீசாருக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story