மார்கழி திருவிழாவின் சிகர நிகழ்ச்சி: சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் தேரோட்டம் இன்று நடக்கிறது


மார்கழி திருவிழாவின் சிகர நிகழ்ச்சி: சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் தேரோட்டம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 29 Dec 2020 11:03 AM IST (Updated: 29 Dec 2020 11:03 AM IST)
t-max-icont-min-icon

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

சுசீந்திரம்,

பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை, ஆவணி, மார்கழி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் மார்கழி மாதம் நடைபெறும் திருவிழா பெரும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரத நாட்டியம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 3-ம் நாள் விழாவில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியும், 5-ம் திருவிழா அன்று கருட தரிசன நிகழ்ச்சியும் நடந்தது.

தேரோட்டம்

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கங்காள நாதர் பிட்சாடனர் ஆக வீதிஉலா வருதல், காலை 8.30 மணிக்கு சாமி அம்பாள், அறம் வளர்த்த நாயகி, விநாயகர் ஆகியோர் கோவிலில் இருந்து வாகனங்களில் எடுத்து வரப்பட்டு தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

அதன்படி சாமி அம்பாள் பெரிய தேர் ஆகிய சாமி தேரிலும், அறம் வளர்த்த நாயகி அம்மன் தனி தேரிலும், விநாயகர் தனித்தேரிலும் எழுந்தருளச் செய்வர். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வருவார்கள். நான்கு ரத வீதிகள் வழியாக தேர் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்த பின்னர் வெடி முழக்கத்துடன் நிலைக்கு வந்து நிற்கும். தொடர்ந்து சாமிகளுக்கு அலங்கார தீபாராதனை, நள்ளிரவு 12 மணிக்கு சந்தன நிகழ்ச்சியும், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனம் ஆகிய திருவாதிரை விழாவும் நடைபெறுகிறது.

பலத்த பாதுகாப்பு

தேரோட்டத்தை காண குமரி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இன்று சுசீந்திரத்துக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். எனவே திருவிழாவையொட்டி குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தெப்பக்குளத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க தீயணைப்பு துறை சார்பில் பைபர் படகு மூலம் தீவிர கண்காணிப்பில் தீயணைப்பு துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிப்பிட வசதி மற்றும் துப்புரவு பணிகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும், தேர் திருவிழா காண வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்ற அறிவிப்பு பலகையும், சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு பஸ்கள்

தேரோட்டத்தையொட்டி குமரி மாவட்டம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், மாவட்ட நிர்வாகம் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் அறங்காவலர் குழு தலைவர் சிவ குற்றாலம், உறுப்பினர்கள் அழகேசன், ஜெயச்சந்திரன், சதாசிவம் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்துள்ளனர்.

Next Story