வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாத வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு - ராணிப்பேட்டை கோர்ட்டு உத்தரவு
வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாத வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ராணிப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டார்.
சிப்காட்(ராணிப்பேட்டை),
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவர் வாலாஜாவில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருக்கும், வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் நீதிமன்ற வளாகத்தில் வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு, வக்கீல் பாபு மீது வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பாலு, தன்னை அவமதித்ததாக வக்கீல் பாபு வாலாஜா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் வக்கீல் பாபுவின் புகார் மீது வாலாஜா போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
இதுகுறித்து வக்கீல் பாபு வாலாஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை ராணிப்பேட்டை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்காக வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோருக்கு ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் இருவரும் நேற்று ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து மாவட்ட உரிமையியல் நீதிமன்ற மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தெய்வீகன் நேற்று வழக்கை விசாரணைக்கு எடுத்து, நீதிமன்றத்தில் ஆஜராகாத வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story