அ.தி.மு.க. மீதான உரிய ஆதாரத்துடன் ஒப்படைக்கப்பட்ட ஊழல் பட்டியல் மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் - வேலூர் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியறுத்தல்


அ.தி.மு.க. மீதான உரிய ஆதாரத்துடன் ஒப்படைக்கப்பட்ட ஊழல் பட்டியல் மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் - வேலூர் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியறுத்தல்
x
தினத்தந்தி 29 Dec 2020 5:39 PM IST (Updated: 29 Dec 2020 5:39 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. மீதான உரிய ஆதாரத்துடன் ஒப்படைக்கப்பட்ட ஊழல் பட்டியல் மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் காங்கிரஸ்மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசினார்.

வேலூர்,

காங்கிரஸ் கட்சியின் 136-ம் ஆண்டு நிறுவன நாள் மற்றும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி வேலூரில் ஏர்கலப்பை விவசாயிகள் சங்கம மாநாடு நேற்று வேலூர் மாங்காய் மண்டி அருகே நடந்தது. மாநாட்டுக்கு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். திருப்பத்தூர் மாவட்ட தலைவர் எஸ்.பிரபு, ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.டீக்காராமன் வரவேற்றார்.

ஆரணி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் விஷ்ணுபிரசாத் தொடக்க உரையாற்றினார்.

தமிழக பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத், தேசிய செயலாளர் மெய்யப்பன், ஜெயக்குமார் எம்.பி., முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு, தமிழ்நாடு பொருளாளர் நா.சே.ராமச்சந்திரன், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் செங்கம் ஜி.குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாநாட்டில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-

இந்த மாநாடு ஒரு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதம் கிடையாது. 3 அல்லது 2 மாதத்தில் தேர்தல் வருகிறது. இதில் தமிழகத்தின் அடுத்த 5 ஆண்டுகால தலை எழுத்தை மாற்ற நாம் பாடுபட வேண்டும்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-., அ.தி.மு.க.வை எதிர்த்து நாம் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம். தமிழக அரசியலில் இளையவர்களுக்கும், எளியவர்களுக்கும் வாய்ப்பளித்த பெருமை ராகுல்காந்தியையே சாரும். தமிழகத்தில் 38 தொகுதிகளில் வென்று சாதனை படைத்துள்ளோம். அதற்கு காரணம் தொண்டர்களும், ஸ்டாலினும், ராகுல் காந்தியும் தான்.

இந்தியா முழுவதும் ராகுல்காந்தி பிரதமராக வருவார் என்றே வாக்களித்தார்கள். அதற்கு உதாரணம் தமிழகம் தான். ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருந்தால் நாம் வெற்றி பெற்றிருப்போம். கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை விட அதிக அளவு வெற்றியை நாம் தற்போது அடைய வேண்டும்.

நமது நோக்கம் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தி அவரை அடிமையாக வைத்திருக்கும் பா.ஜ.க.வையும் தோற்கடிக்க வேண்டும். மன்மோகன் சிங் கால ஆட்சியிலான இந்திய பொருளாதார வளர்ச்சியையும், மோடி ஆட்சியில் இந்திய பொருளாதார வளர்ச்சியையும் நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். மன்மோகன்சிங் ஆட்சியில் தான் விவசாயிகளுக்கு விளை பொருள்களுக்கான அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மோடி ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுகிறது. காங்கிரஸ் பொதுத்துறை மற்றும் தனியார் துறையை அனுமதித்தது. அது கலப்பு பொருளாதாரம். இதையெல்லாம் மாற்றி தனியார் துறையை வளர்ச்சி அடைய செய்து இந்தியாவில் ஒவ்வொரு பொதுத்துறையையும் அழித்து வருகிறார்கள். தேசத்தை சீர்குலைக்கிறார்கள். பா.ஜ.க. மதவிஷயத்தில் மட்டுமே மக்களை பிரிக்கவில்லை. பொருளாதார ரீதியிலும் மக்களை வீழ்த்த முயற்சி செய்கிறார்கள். இதனால் தான் மோடியை தோற்கடிக்க வேண்டும்.

வேளாண் சட்டத்தை அ.தி.மு.க. ஆதரித்து எவ்வளவு பெரிய துரோகம் செய்துள்ளது. அதை எதிர்த்து கேட்க்காமல் ஆதரித்ததால் அவர்கள் சுயமரியாதையை இழந்துவிட்டார்கள். இந்த அரசின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் நாம் பேச வேண்டும்.

தி.மு.க. அண்மையில் தமிழக கவர்னரிடம் அ.தி.மு.க. அரசு மீதான உரிய ஆதாரத்துடன் ஒப்படைக்கப்பட்ட ஊழல் பட்டியல் மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். திருவள்ளுவர், பெரியார் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் மீது இரவில் காவிச்சாயம் பூசுகிறார்கள். இதை ஏன் மூத்த தலைவர்கள் கேட்பது இல்லை.

பா.ஜ.க அலுவலகம் மீது நாங்கள் பகலிலே கருப்பு சாயம் பூசுகிறோம். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள். வன்முறையை தான் நீங்கள் விரும்புகிறார்களா?

ஏர்கலப்பை மாநாடு ரத்தம் சிந்துவதை விரும்பவில்லை. உணவு வழங்குவதையே செய்கிறது. அதனால் தான் காங்கிரஸ் ஏர்கலப்பையை கையில் எடுத்துள்ளது. ஆனால் பா.ஜ.க., கடவுள் முருகனின் ஆயுதமான வேலை கையில் எடுத்துள்ளது. பா.ஜ.க. வேலை எடுத்துவர காரணம் என்ன?. அதன் பொருள் என்ன?. யாரை மிரட்ட அதை எடுத்து வருகிறீர்கள். இவர்கள் செய்வது கொலை பாதக செயல். ஆன்மிகத்திற்கும், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வுக்கும் எந்த சம்பந்தம் இல்லை. மக்களை பிரித்துபார்ப்பவர்கள். அவர்களிடையே வேறுபாட்டை உருவாக்கப்பார்க்கிறீர்கள். ஆகவே தற்போது பா.ஜ.க.வினர் புறக்கணிக்கப்படுகிறார்கள். உங்களின் தத்துவம் தமிழகத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் கைகளில் ஏர்கலப்பையை ஏந்தியபடி வேளாண்மை சட்டத்தை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்.

முன்னதாக மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜா ஜெ.அசேன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஒய்.தீனா என்ற தினகரன், வேலூர் மாவட்ட எஸ்சி, எஸ்.டி.பிரிவு தலைவர் பி.பிரசன்னகுமார், வட்டார தலைவர் பொன்னை எல்.கோட்டீஸ்வரன், காட்பாடி சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெ.ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி பொருளாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான அக்ராவரம் கே.பாஸ்கரன் நன்றி கூறினார்.

Next Story