குடும்ப அட்டைகளுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் - அதிகாரிகள் பேச்சுவார்த்தை


குடும்ப அட்டைகளுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் - அதிகாரிகள் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 29 Dec 2020 5:47 PM IST (Updated: 29 Dec 2020 5:47 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தை குடும்ப அட்டைகளுடன் கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா கெளாப்பாறை கிராமம் அம்பேத்கர் நகர் மற்றும் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மதியம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்ப அட்டைகளை கைகளில் ஏந்தியபடி முற்றுகையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

எங்கள் குடியிருப்பு பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். 360 குடும்ப அட்டைகள் உள்ளன. சமூக ரீதியான பிரச்சினைகளை தவிர்க்க கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதிக்கு தனியாக பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென அண்மையில் பகுதி நேர ரேஷன் கடையை ஏற்கனவே உள்ள பிரதான ரேஷன் கடையுடன் இணைத்து விட்டனர். இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க செல்லும் போது தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்பட தொடங்கியுள்ளன.

இதற்கு தீர்வு காண மீண்டும் எங்கள் பகுதியில் ரேஷன் கடையை தொடங்க வேண்டும்.இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் குடும்ப அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளோம். இதேபோல் எங்கள் பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வழித்தட வசதி உள்பட கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் உதவி கலெக்டர் பிரதாப் பேச்சுவார்த்தை நடத்தினார். கிராம மக்கள் வலியுறுத்தும் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.

Next Story