ரவுடி கொலை வழக்கு: ஓமலூர் கோர்ட்டில் 3 பேர் சரண் - மேலும் 2 பேரை பிடித்து போலீஸ் விசாரணை


ரவுடி கொலை வழக்கு: ஓமலூர் கோர்ட்டில் 3 பேர் சரண் - மேலும் 2 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 29 Dec 2020 7:42 PM IST (Updated: 29 Dec 2020 7:42 PM IST)
t-max-icont-min-icon

ரவுடி கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட 3 பேர் ஓமலூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த கொலை தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

சேலம், 

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 34). பிரபல ரவுடியான இவரை கடந்த 22-ந் தேதி மர்ம கும்பல் ஒன்று கொலை செய்தது. இதுதொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை விரைவில் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக சூரி, பழனிசாமி, ஜெயக்குமார், சதீஷ் ஆகியோரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசாரால் தேடப்பட்ட ஜான் என்கிற சாணக்கியன் உள்பட 7 பேர் கரூர் கோர்ட்டிலும், சாரதி உள்பட 8 பேர் நாமக்கல் கோர்ட்டிலும் சரண் அடைந்தனர்.

ரவுடி செல்லதுரை கொலை தொடர்பாக வேலூரை சேர்ந்த பிரபல ரவுடி வசூர் ராஜா உள்பட சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் திருச்சியில் பதுங்கியிருந்த அண்ணன், தம்பிகளான கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த சீசஸ் மற்றும் குட்டியப்பன் ஆகியோரை தனிப்படை போலீசார் பிடித்து வந்து இந்த கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே இந்த கொலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (36), இளையராஜா (25), ஜெயசூரியன் (29) ஆகியோர் நேற்று ஓமலூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சீதாலட்சுமி உத்தரவிட்டார்.

இந்த கொலை வழக்கு சம்பந்தமாக கரூர் கோர்ட்டில் கடந்த 23-ந்தேதி சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜ்மணிகண்டன் (32), விக்னேஷ் (35), பாண்டியராஜ் (31), ரஞ்சித்குமார் (32), ஆர்.விக்னேஷ் (35), சாணக்யா (26), மணிகண்டன் (29) ஆகிய 7 பேர் சரண் அடைந்தனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து அவர்கள் 7 பேரையும் நேற்று சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-2-ல் ஆஜர்படுத்தினர்.

பின்னர் அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்க அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். 7 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டு அனுமதி அளித்தார். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Next Story