8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி சேலத்தில் குடும்பத்தினருடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - 300 போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு + "||" + Urging the abandonment of the 8-lane project With family in Salem Farmers Demonstration
8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி சேலத்தில் குடும்பத்தினருடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - 300 போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி சேலத்தில் விவசாயிகள் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 300 போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல்வேறு அமைப்புகளும், பாதிக்கப்பட்ட விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இத்திட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, சட்டத்திற்கு உட்பட்டு திட்டத்தை செயல்படுத்தலாம் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தாமாக முன்வந்து கைவிட வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது குடும்பத்தினருடன் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
8 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாகி சந்திரமோகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இதில், சினிமா டைரக்டர் கவுதமன் மற்றும் தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வீரபாண்டி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட டைரக்டர் கவுதமன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம்-சென்னை இடையே ஏற்கனவே 3 வழித்தடங்களில் சாலைகள் உள்ளன. இதனால் தொழில் வளர்ச்சி அடையும் என்ற காரணத்தை கூறி 8 வழிச்சாலை திட்டம் அமைப்பதை ஏற்க முடியாது. விவசாயத்தையும், மண் வளத்தையும் அழித்து ஒருபோதும் 8 வழிச்சாலை திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். ஜல்லிக்கட்டுக்காக ஒட்டுமொத்த தமிழகமே போராட்ட களத்தில் ஈடுபட்டதை மத்திய அரசு மறந்து விடக்கூடாது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் இந்த 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். அதேசமயம் வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க என எந்த கட்சிகளாக இருந்தாலும் 8 வழிச்சாலை திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று தங்களது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளிக்க வேண்டும். விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தை செயல்படுத்த நினைத்தால் ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரி தமிழகத்தில் மாபெரும் போராட்டங்கள் வெடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகளின் போராட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் கலவரம் எதுவும் நடந்தால் அதை கட்டுப்படுத்தும் வகையில் 2 வஜ்ரா வாகனங்களும் அங்கு வரவழைக்கப்பட்டன.
இதனால் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பும், பதற்றமான சூழ்நிலையும் நிலவியது.