ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் கூலி குறைப்பு: மக்கள் கிராம சபை கூட்டம் நடத்திய தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல் - செஞ்சி அருகே பரபரப்பு
ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் கூலி குறைக்கப்பட்டதை கண்டித்து மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க.வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
செஞ்சி,
மயிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வல்லம் ஒன்றியம் நெகனூர் கிராமத்தில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு வல்லம் வடக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாநில தீர்மானக் குழு உறுப்பினர் செஞ்சி சிவா கலந்துகொண்டு அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து பேசினார்.
அப்போது, மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலைக்கு செல்பவர்களுக்கு கூலியாக ஏற்கனவே ரூ.200 வழங்கிய நிலையில் தற்போது ரூ. 120 தான் வழங்கி வருகிறார்கள் என்று கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து தி.மு.க.வினர் செஞ்சி சிவா, வல்லம் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் தமிழரசன், செயலாளர்கள் ரவிச்சந்திரன், ஸ்டாலின், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர் மற்றும் கிளைக் கழக செயலாளர்கள் ஆகியோர், கிராம பெண்களுடன் சேர்ந்து அந்த பகுதியில் செஞ்சி-நெகனூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த, ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் புஷ்பா, வளத்தி இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், உடனடியாக கூலியை உயர்த்தி வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், பரபரப்பும் நிலவியது.
Related Tags :
Next Story