குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக ஜெயலட்சுமியை அறிவிக்கக்கோரி - நடுவீரப்பட்டில், பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக ஜெயலட்சுமியை அறிவிக்கக்கோரி - நடுவீரப்பட்டில், பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Dec 2020 8:41 PM IST (Updated: 29 Dec 2020 8:41 PM IST)
t-max-icont-min-icon

குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக ஜெயலட்சுமியை அறிவிக்கக்கோரி நடுவீரப்பட்டில், பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லிக்குப்பம்,

கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் அதே பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி, விஜயலட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் ஜெயலட்சுமியை ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ஜெயலட்சுமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இது சம்பந்தமாக கடலூர் மாவட்ட நிர்வாகத்திடம், அதிகாரிகளின் அலட்சியத்தால் தேர்தலில் வெற்றி பெற்றவரின் பெயர் மாற்றப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனால் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்ததில், ஊராட்சி மன்ற தலைவராக ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

ஆனால் இதுநாள்வரை ஊராட்சி மன்ற தலைவராக ஜெயலட்சுமியை, தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் ஜெயலட்சுமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நடுவீரப்பட்டு திடலில், தேர்தல் ஆணையம் ஜெயலட்சுமியை ஊராட்சி மன்ற தலைவராக அறிவிக்கக் கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

அதன்படி ஜெயலட்சுமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சட்டையில் கருப்பு பட்டை அணிந்து நேற்று காலை நடுவீரப்பட்டு திடலில் ஒன்று திரண்டனர்.

அப்போது அங்கு வந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் தலைமையிலான போலீசார் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கிடையாது. அதனால் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் தேர்தல் ஆணையத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினர். பின்னர் ஜெயலட்சுமியை ஊராட்சி மன்ற தலைவராக தேர்தல் ஆணையம் அறிவிக்காவிட்டால் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என கூறிவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story