திருஉத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா - முன்னேற்பாடு நடவடிக்கை குறித்து கலெக்டர் ஆய்வு


திருஉத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா - முன்னேற்பாடு நடவடிக்கை குறித்து கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 29 Dec 2020 10:00 PM IST (Updated: 29 Dec 2020 10:00 PM IST)
t-max-icont-min-icon

திருஉத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவில் ஆருத்ரா தரிசன விழா இன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ஆகியோர் நேரடி ஆய்வு செய்தனர்.

ராமநாதபுரம்,

திருஉத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவில் ஆருத்ரா தரிசன விழா இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ஆகியோர் நேரடி ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கையில் உள்ள மங்களநாதசுவாமி கோவிலில் சிறப்பு வாய்ந்த மரகத நடராஜர் சிலை உள்ளது. இந்த கோவிலில் இன்றும், நாளையும் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது. வருடத்திற்கு ஒரு முறை சந்தனம் களையும் இந்த விழாவின்போது மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் களையப்பட்டு, பொதுமக்கள் தரிசனத்திற்காக வைக்கப்படும். இதைதொடர்ந்து பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று மறுநாள் காலை சிலை மீது மீண்டும் சந்தனம் பூசப்படும். நடப்பு ஆண்டில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்திருவிழாவில் கலந்து கொள்வதற்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் போதிய தடுப்புகள் அமைத்திடவும், தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறை வசதி ஏற்படுத்தவும், குப்பைகள் தேங்காத வகையில் சுற்றுப்புற சுகாதார தூய்மை பணிகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவசர சூழ்நிலைகளை எதிர்கொள்ள ஏதுவாக தயார் நிலையில் மருத்துவக் குழுக்கள் அமைத்திடவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், கூடுதல் கலெக்டர் பிரதீப் குமார், ராமநாதபுரம் சப்-கலெக்டர் சுகபுத்ரா, ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story