சிவகங்கையில் பரபரப்பு: கழுத்தை கத்தியால் அறுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த வட்டார வளர்ச்சி அதிகாரி - உயர் அதிகாரிகள் அழுத்தம் காரணமா?
சிவகங்கையில் கழுத்தை கத்தியால் அறுத்து வட்டார வளர்ச்சி அதிகாரி ரத்தவெள்ளத்தில் கிடந்தார். உயர் அதிகாரிகள் அழுத்தம் காரணமாக அவர் இவ்வாறு செய்தாரா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகங்கை,
சிவகங்கை செந்தமிழ்நகர் சிலம்பு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 59). இவரது மனைவி தமிழ்செல்வி (54). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
ரமேஷ் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமையில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சிவகங்கையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார்.
ரமேஷ் ஏற்கனவே கண்ணங்குடி, சாக்கோட்டை, இளையான்குடி, உள்ளிட்ட ஊர்களில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். இவர் தற்போது அரசு வழங்கிய ஒரு வருட பணிநீட்டிப்பில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் ரமேஷ் தன்னுடைய வீட்டின் அருகில் உள்ள புதரில் கத்தியால் கழுத்தை அறுத்து கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அருகில் கத்தியும் கிடந்தது. இதை பார்த்த அவருடைய உறவினர்கள் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அவரது மனைவி தமிழ்செல்வி சிவகங்கை நகர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியுள்ளதாவது:-
என்னுடைய கணவர் இளையான்குடியில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணிபுரிந்தார். பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது சிவகங்கையில் ஊரக வளர்ச்சி முகமையில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணிபுரிகிறார்.
அவருக்கு கடந்த 26-ந்தேதி இரவு 10 மணிக்கு ஒரு போன் வந்தது. அவர் நீண்ட நேரம் போனில் பேசினார். யார் பேசியது என்று கேட்ட போது அலுவலகத்தில் பணியாற்றும் உயர் அதிகாரி பேசியதாக சொன்னார். அத்துடன் தன்னை அந்த இரவு நேரத்தில் அலுவலகத்திற்கு வரசொன்னதாகவும் தெரிவித்தார். அதன்பின்னர் காலை 6.30 மணி அளவில் வீட்டைவிட்டு சென்றார். மீண்டும் அவர் வீட்டிற்கு வரவில்லை.
பின்னர் அவர் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் 2 பேர் கொடுத்த அழுத்தம் காரணமாகதான் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். எனவே அந்த 2 அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் அவர் கூறியுள்ளார்.
இதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்தவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் சிவகங்கை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Related Tags :
Next Story