உத்தமபாளையம் அருகே ஆசிரியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
உத்தமபாளையம் அருகே ஆசிரியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி, புனித பனிமய அன்னை ஆலய தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 52). இவர் உத்தமபாளையம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆரோக்கியசெல்வி (48). இவர் ராயப்பன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மற்றொரு மகன் மதுரையில் உள்ள பல் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சேகர் தனது மனைவியுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் திடீரென்று பலத்த சத்தம் கேட்டது. உடனே சேகரும், அவரது மனைவியும் எழுந்து, வீட்டின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது வீட்டின் முன்புறம் பெட்ரோல் குண்டு ஒன்று வெடித்த நிலையில் கிடந்தது. மேலும் 2 பெட்ரோல் குண்டுகள் வீட்டின் முன்புறம் மின்மீட்டர் அருகில் வெடிக்காமல் சிதறி கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த சேகர், வீட்டிற்கு வெளியே சென்று பார்த்தார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்வது தெரியவந்தது.
இதையடுத்து நேற்று காலையில் சேகர், தனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து உத்தமபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னக்கண்ணு, சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் தேனியில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்பிறகு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் சேகருக்கு யாரிடமாவது முன்விரோதம் உள்ளதா? என்று போலீசார் விசாரித்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஆசிரியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் ராயப்பன்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story