ஊட்டியில் உறைபனி தாக்கம் தொடர்கிறது - கடும் குளிரால் பொதுமக்கள் அவதி
ஊட்டியில் உறைபனி தாக்கம் தொடர்கிறது. இதனால் கடுங்குளிர் நிலவுவதால் பொதுமக்கள் அவதியடைந்து உள்ளனர்.
ஊட்டி,
மலை மாவட்டமான நீலகிரியில் ஆண்டுதோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து பனிகாலம் நிலவுகிறது. ஊட்டியில் காலநிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது உறைபனி தாக்கம் காணப்படுகிறது. இதன்காரணமாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடுங்குளிர் நிலவுகிறது.
ஊட்டி குதிரை பந்தய மைதானம், எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானம், தாவரவியல் பூங்கா, ரெயில் நிலைய வளாகம், தலைகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள புல்வெளிகள் மீது உறைபனி படர்ந்து இருக்கிறது. இதனால் பச்சை பசேலென காணப்படும் புல்வெளிகள் வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கிறது.
வெயில் வந்த பின்னர் புல்வெளியில் இருக்கும் உறைபனி உருகுவதும் அல்லது நீராவியாக மாறுவதும் வழக்கம். தொடர் உறைபனி பொழிவால் புல்வெளிகள் கருக தொடங்கி உள்ளது. இந்த உறைபனி காலத்தை ஊட்டிக்கு வருகை தரும் வெளிமாநில மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட சுற்றுலா பயணிகள் அனுபவித்து வருகின்றனர்.
மேலும் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைக்கோஸ், முள்ளங்கி போன்ற காய்கறி பயிர்கள் கருகாமல் இருக்க விவசாயிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் பயிர்களுக்கு ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகிறார்கள்.
ஊட்டியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது. தொடர் உறைபனியால் தேயிலை செடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, மரவியல் பூங்காவில் மலர் மற்றும் அலங்கார செடிகளை பாதுகாக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இரவு நேரத்தில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் மாலை நேரத்தில் பலர் தீ மூட்டி குளிர்காய்ந்தும் வருகிறார்கள்.
Related Tags :
Next Story