மசினகுடி அருகே, காயம் அடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை
மசினகுடி அருகே பொக்காபுரத்தில் கும்கிகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்து காயம் அடைந்த காட்டு யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட (வெளி மண்டலம்) மசினகுடி, பொக்காபுரம், ஆச்சக்கரை, மாவனல்லா உள்பட பல இடங்களில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை முதுகு பகுதியில் காயத்துடன் சுற்றியது.
இந்த யானை அவ்வப்போது ஊருக்குள் புகுந்தும் அட்டகாசத்தில் ஈடுபட்டது. எனவே அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து அந்த யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது அந்த யானை மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம் பகுதியில் நின்றது. இதையடுத்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் உத்தரவின்பேரில் துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் தலைமையில் வனச்சரகர் காந்தன், முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், கோவை மண்டல வன கால்நடை டாக்டர்கள் மனோகரன், சுகுமார் மற்றும் டாக்டர் கோசலன் கொண்ட மருத்துவ குழுவினர், வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதுபோன்று முதுமலை தெப்பக்காட்டில் இருந்து கும்கிகள் வசீம், சுஜய், முதுமலை, சீனிவாஸ், மூர்த்தி ஆகியவை வரவழைக்கப்பட்டது. பின்னர் அந்த கும்கிகள் உதவியுடன் வனத்துறையினர் காயம் அடைந்த காட்டு யானையை சுற்றி வளைத்தனர். பின்னர் அதற்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்தப்பகுதியிலேயே காட்டு யானையின் கால்கள் மரத்தில் இழுத்து கட்டப்பட்டன. அத்துடன் பாதுகாப்புக்காக யானையை சுற்றிலும் கும்கிகள் நின்றிருந்தன. தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினர் காட்டு யானையின் முதுகு பகுதியில் சீள் வடிந்த நிலையில் இருந்த காயத்தை சுத்தம் செய்து சிகிச்சை அளித்தனர்.
பிறகு அந்த யானைக்கு மயக்கம் தெளிய ஊசி போடப்பட்டு, கால்களில் கட்டப்பட்ட கயிறுகளை அவிழ்த்துவிட்டனர். தொடர்ந்து அந்த யானைக்கு கரும்பு உள்ளிட்ட உணவுகளும் கொடுக்கப்பட்டன. அவற்றை சாப்பிட்டவாறு அந்த யானை சற்றுதூரம் சென்றது. தொடர்ந்து அந்த காட்டு யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் கூறும்போது, காட்டு யானைகளுக்கு இடையே நடந்த மோதல் காரணமாக காயம் ஏற்பட்டு இருக்கலாம். காயம் அடைந்த காட்டு யானையின் முதுகில் 15 செ.மீ. ஆழத்துக்கு காயம் இருக்கிறது. அதற்கு ஆன்டிபயாட்டிக் ஊசி போடப்பட்டு, காயத்துக்கு மருந்து செலுத்தப்பட்டது. தற்போது அந்த யானை நன்றாக இருக்கிறது. எனினும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அடுத்த கட்ட சிகிச்சை அளிப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றார்.
Related Tags :
Next Story