சொத்து பிரச்சினை: கலெக்டர் அலுவலகம் முன்பு 4 மூதாட்டிகள் தீக்குளிக்க முயற்சி - தாசில்தார் பேச்சுவார்த்தை
சொத்து பிரச்சினை காரணமாக கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு 4 மூதாட்டிகள் தீக்குளிக்க முயன்றனர். அவர்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை மனு கொடுக்க 4 மூதாட்டிகள் வந்தனர். அப்போது திடீரென அவர்களது பாட்டில்களில் கொண்டு வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை கண்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஓடிச்சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் அன்னூர் தாலுகா குப்பனூர் அருகே உள்ள ஆத்திகுட்டையை சேர்ந்த முருகம்மாள்(வயது 97) மற்றும் அவரது மகள்கள் மாராக்காள்(75), லட்சுமி(70),பாப்பாத்தி(65) என்பது தெரியவந்தது.
அப்போது போலீசாரிடம் முருகம்மாள் கூறியதாவது:-
எனக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். எனக்கு சொந்தமாக 12 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் எனது மகன் வீடு கட்டினான். அப்போது வீட்டுக்கு மின் இணைப்பு பெறுவதற்கு அந்த நிலத்தை அவனது பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றுக்கூறி என்னிடமும், எனது மகள்களிடமும் ஒரு பத்திரத்தில் கைநாட்டு வாங்கினான். ஆனால் அதன்பிறகுதான் எங்களை ஏமாற்றி அவனது பெயருக்கு நிலத்தை மாற்றிவிட்டது தெரியவந்தது.
இதற்கிடையில் எனது மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டான். தற்போது எனது மருமகள் அந்த நிலத்தை அனுபவித்து வருகிறார்.
எங்களை ஏமாற்றி நிலத்தை பறித்துக்கொண்டது குறித்து போலீசிலும், வருவாய்த்துறையிலும் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் பேச்சுவார்த்தை நடத்தி மாதம் ரூ.6 ஆயிரம் மட்டும் ஜீவனாம்சமாக பெற்று தருவதாக கூறினர். எனக்கு ஜீவனாம்சம் தேவையில்லை. அந்த நிலத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கலெக்டர் அலுவலகத்துக்கு பணி நிமித்தமாக அன்னூர் தாசில்தார் வந்தார். தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற 4 மூதாட்டிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் அவர் அவர்களை அன்னூர் தாசில்தார் அலுவலகத்துக்கு வரும்படியும், அங்கு வைத்து பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினார். இதை ஏற்று அவர்கள் அன்னூருக்கு புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக சொத்து பிரச்சினை காரணமாக தீக்குளிக்க முயன்ற முருகம்மாள் மீது போலீசார் தண்ணீரை ஊற்றியதால், அவர் குளிரில் நடுங்கியபடி இருந்தார்.
அப்போது அந்த வழியாக பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிந்து இருந்த பக்தர் ஒருவர் வந்தார். பின்னர் தனது தோளில் இருந்த துண்டை எடுத்து, குளிரில் நடுங்கிய மூதாட்டியிடம் வழங்கி உதவினார். அவரை போலீசார் பாராட்டினர்.
Related Tags :
Next Story