அம்மா மினி கிளினிக் மூலம் சென்னையில் 5,864 பேர் பயனடைந்துள்ளனர்; அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்


அம்மா மினி கிளினிக்; அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
x
அம்மா மினி கிளினிக்; அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தினத்தந்தி 30 Dec 2020 1:21 AM IST (Updated: 30 Dec 2020 1:21 AM IST)
t-max-icont-min-icon

அம்மா மினி கிளினிக் மூலம் சென்னையில் இதுவரை 5,864 பேர் பயனடைந்துள்ளனர் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

ஆய்வுக்கூட்டம்
தமிழகத்தில் கொரோனா தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வடகிழக்கு பருவமழை, புயல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார்.

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி கமி‌‌ஷனர் கோ.பிரகா‌‌ஷ், நகராட்சி நிர்வாக ஆணையர் கா.பாஸ்கரன், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் த.ந.ஹரிஹரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

5,864 பேர் பயன்
சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் அம்மா மினி கிளினிக் ஏற்படுத்த நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் வரை 38 அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை 5,864 நபர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.

கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே சிகிச்சை அளிப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ள நிலையில் அம்மா மினி கிளினிக் திட்டமானது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே சென்னையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அம்மா மினி கிளினிக் விரைந்து தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் சார்பில் சீர்மிகு நகரத் திட்டம், அம்ரூத் திட்ட பணிகள், சிறப்பு சாலைகள் திட்டத்தின் பணிகளை செயல்படுத்த வேண்டும்.

திட்டங்கள்
ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் பி.எம்.ஜி.எஸ்.ஒய். திட்டத்தில் ரூ.1,265 கோடி மதிப்பீட்டிலான சாலைப் பணிகள், 14, 15-வது மத்திய நிதி குழு மானிய திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும். சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் வழங்கப்படும் தற்போதைய குடிநீர் நிலவரம், 150 எம்.எல்.டி. திட்டம் மற்றும் 400 எம்.எல்.டி. திட்டம் குறித்தும், தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் சார்பில் வழங்கப்படும் தற்போதைய குடிநீர் நிலவரம், 2020-21 ஆண்டின் புதிய திட்டங்கள், பெரிய கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்கவேண்டும்.

ரூ.1,550 கோடி மதிப்பில் விழுப்புரம் மாவட்டத்தில் 60 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு உடனடியாக ஒப்பந்தங்கள் கோரவவேண்டும். ரூ.200 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்டம், விழுப்புரம் பாதாள சாக்கடைத் திட்டம் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும்.

அர்ப்பணிப்பு உணர்வு
அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில் 2020-21-ம் ஆண்டு திட்ட இலக்கினை எய்திட வேண்டும். தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். ஒப்பந்தங்கள் கோரும் நிலையில் உள்ள பணிகளுக்கு பணியாணை வழங்கி விரைவில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பணிகளை முழுமையாக நிறைவேற்ற காலக்கெடு குறைவாக இருப்பதால், அனைத்து அதிகாரிகளும், அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story