கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை; கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் தகவல்

கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் கூறியுள்ளார்.
கர்நாடக கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தண்டனைக்குரிய குற்றம்
கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆண் கன்று குட்டிகளை கொல்ல விற்பனை செய்யப்படுவது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. புதிய சட்டப்படி இது தண்டனைக்குரிய குற்றம். பசு மாடுகளை வளர்ப்பவர்கள், கன்று குட்டிகளை குறைந்தது 6 மாதங்கள் வளர்க்க வேண்டும். விவசாயிகள் தங்களிடம் வயதான பசு மாடுகள் இருந்து அதை வளர்க்க முடியாவிட்டால் அதை அருகில் உள்ள கோசாலைகளில் விட்டுவிடலாம்.
கர்நாடகத்தில் 159 கோசாலைகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது உள்ள கோசாலைகளில் பசு மாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் அனைத்து தாலுகாக்களிலும் புதிதாக கோசாலைகளை திறக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாடுகள் கடத்தப்படுவதை கண்காணிக்க போலீசார் மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் மாநிலத்தில் பசுக்கள் கொல்லப்படக்கூடாது.
சாப்பிடுபவர்களின் உரிமை
விவசாய பணிகளுக்கு கொண்டு செல்லப்படும் மாடுகளுக்கு எந்த ரீதியில் அனுமதி வழங்குவது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறோம். பசுவதை தடைக்கு அவசர சட்டத்தை அரசு கொண்டு வருகிறது என்ற தகவல் தெரிந்ததும் சில அரசியல் கட்சிகள் தங்களின் நாடகத்தை தொடங்கியுள்ளன. இந்து மதத்தில் மாடுகளுக்கு தனி இடம் உண்டு.
இறைச்சி சாப்பிடுவர்களின் உரிமையை நாங்கள் இந்த சட்டம் மூலம் பறிக்கவில்லை. 13 வயதுக்கு மேற்பட்ட எருமைகளை கொல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மாடுகளை பாதுகாக்க அரசுடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும். பிற மாநிலங்களை விட மாடுகளை பாதுகாப்பதில் கர்நாடகம் வெற்றி பெற மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு பிரபுசவான் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story