கர்நாடகத்திற்கு விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கிடைக்கும்: சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நம்பிக்கை


கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்
x
கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்
தினத்தந்தி 30 Dec 2020 4:09 AM IST (Updated: 30 Dec 2020 4:09 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்திற்கு விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கிடைக்கும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

இலவச சிகிச்சை
பெங்களூரு சிவாஜிநகரில் வாஜ்பாய் மருத்துவ அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, அந்த கட்டிடத்தை திறந்து வைத்தார். 

இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேசும்போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் ஒரு மருத்துவ கல்லூரியை தொடங்க ரூ.600 முதல் ரூ.700 கோடி செலவாகிறது. அரசு-தனியார் பங்களிப்பில் மருத்துவ கல்லூரிகளை தொடங்கினால் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு படிக்க வாய்ப்பு கிடைக்கும். பொதுமக்களுக்கு இலவச சிகிச்சையும் கிடைக்கும். குஜராத்தில் இத்தயை முயற்சி நடந்துள்ளது. கர்நாடகத்திலும் இந்த முயற்சியை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்.

மருத்துவ கல்லூரிகள்
உலக சுகாதார நிறுவனத்தின்படி ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டர் இருக்க வேண்டும். ஆனால் நமது நாட்டில் 12 ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டர் உள்ளார். மக்கள்தொகைக்கு ஏற்ப டாக்டர்கள் இருக்க வேண்டும் என்றால் அதிக எண்ணிக்கையில் மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும். பிரதமர் மோடி கடந்த 6 ஆண்டுகளில் புதிதாக 157 மருத்துவ கல்லூரிகளை தொடங்கியுள்ளார்.

22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கும் இலக்கை மத்திய அரசு கொண்டுள்ளது. கர்நாடகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசின் அனுமதி பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் கர்நாடகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை கிடைக்கும்.

26 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிய சுகாதாரத்துறை கொள்கை வகுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ கல்வித்துறையை உள்ளடக்கி இந்த கொள்கை வெளியிடப்படும். மருத்துவ கல்லூரிகள் இல்லாத இடங்களில் மாவட்ட ஆஸ்பத்திரிகளில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மருத்துவ கல்லூரிகளில் விடுதி வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

இங்கிலாந்தில் இருந்து கர்நாடகத்திற்கு வந்தவர்களில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் சோதனை நிமான்ஸ் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் தற்போது 3 பேருக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 3 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பயப்பட தேவை இல்லை
புதிய வகை கொரோனா பாதிப்பை கண்டு யாரும் பயப்பட தேவை இல்லை. இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் சிலர் தங்களின் செல்போனை அணைத்து வைத்துக் கொண்டுள்ளனர். அவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

Next Story