நெல்லை ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


நெல்லை ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 30 Dec 2020 7:39 AM IST (Updated: 30 Dec 2020 7:39 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

நெல்லை,

நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பழமைவாய்ந்த செப்பறை அழகியகூத்தர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் திருவாதிரை திருவிழா சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டு திருவாதிரை திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.

தேரோட்டம்

7-வது நாளில் அழகிய கூத்தர் விழா மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு சிவப்பு, பச்சை சாத்தி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. நேற்று திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினார். 11.30 மணி அளவில் தேர் வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர். இயற்கை எழில் சூழ்ந்த ரதவீதியில் தேர் அசைந்தாடி வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இதில் நெல்லை சுற்று வட்டாரப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

ஆருத்ரா தரிசனம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் இன்று (புதன்கிழமை) அதிகாலையில் நடைபெற்றது. அதிகாலை 2 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகமும், அதை தொடர்ந்து கோ பூஜை, ஆருத்ரா தரிசனமும் நடைபெற்றது.

மதியம் 1.30 மணிக்கு நடராஜர் திருநடன காட்சியும், அழகிய கூத்தர் வீதி உலாவும் நடைபெறுகிறது. மாலையில் பஞ்சமுக அர்ச்சனை நடைபெறுகிறது.

Next Story