உறவுக்கார பெண்ணிடம் தவறாக நடப்பேன் என்று கூறியதால் “தையல் தொழிலாளியை கழுத்தை அறுத்து கொன்றோம்” கைதான நண்பர் வாக்குமூலம்


உறவுக்கார பெண்ணிடம் தவறாக நடப்பேன் என்று கூறியதால் “தையல் தொழிலாளியை கழுத்தை அறுத்து கொன்றோம்” கைதான நண்பர் வாக்குமூலம்
x
தினத்தந்தி 30 Dec 2020 11:39 AM IST (Updated: 30 Dec 2020 11:39 AM IST)
t-max-icont-min-icon

உறவுக்கார பெண்ணிடம் தவறாக நடப்பேன் என்று கூறியதால், தையல் தொழிலாளியை கழுத்தை அறுத்து கொன்றோம் என்று கைதான நண்பர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

பல்லடம்,

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள பிரமனூரை சேர்ந்த கருப்பையா என்பவரது மகன் முருகன் (வயது 30). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக முருகனின் மனைவி தனது குழந்தையுடன் பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் முருகன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குன்னாக்கல்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துதங்கி, திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடன் அதே பகுதியை சேர்ந்த இவருடைய உறவினரான வெள்ளை சாமி என்பவரின் மகன் சக்திவேல் (37) என்பவரும் தங்கி இருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நண்பர்களான இருவரும் ஒரே அறையில் தங்கி இருப்பதால் அவ்வப்போது சேர்ந்து மது குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு முருகனுக்கும், சக்திவேலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் மறுநாள் பல்லடம்-திருப்பூர் சாலையில் தெற்குப்பாளையம் அரசு சேமிப்பு கிடங்கு எதிரே முருகன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த கொலை தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கொலை செய்த கொலையாளி யார்? என்று விசாரணை செய்தனர்.

2 பேர் கைது

விசாரணையில் முருகனின் உறவினரான சக்திவேலும், இவருடைய நண்பர் தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டியை சேர்ந்த சுள்ளான் குமார் என்கிற கிருஷ்ணகுமாரும் (34) சேர்ந்து கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் முருகனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சக்திவேலையும், கிருஷ்ணகுமாரையும் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து கைதான சக்திவேல் போலீசில் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

எனது உறவினரான முருகனும், நானும் குன்னாக்கல்பாளையத்தில் ஒரே வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தோம். முருகனின் மனைவி பிரிந்து சென்று விட்டதால், எனது மற்றொரு உறவினரின் பெண்ணை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யுமாறு அடிக்கடி தொந்தரவு செய்தார். ஆனால் நான் முடியாது என்று மறுத்து விட்டேன். அப்படி என்றால் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்வேன் என்று முருகன் என்னிடம் சவால் விட்டார். இதனால் எனக்கும், முருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் என்னை தரக்குறைவாக பேசினார். இதனால்எனக்கு முருகன் மீது ஆத்திரம் ஏற்பட்டது.

கழுத்தை அறுத்தோம்

எனவே முருகனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். அதற்காக எனது நண்பர் கிருஷ்ணகுமாரை வரவழைத்தேன். சம்பவத்தன்று நாங்கள் 3 பேரும் நாங்கள் தங்கி இருந்த வீட்டில் வைத்து மதுஅருந்தினோம். அப்போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து முருகனை, நானும், கிருஷ்ணகுமாரும் தாக்கினோம். இதில் அவர் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது.

பின்னர் நானும், கிருஷ்ணகுமாரும் சேர்ந்து முருகனை ஒரு மொபட்டில் பின்னால் இருக்க வைத்து தெற்குபாளையம் பிரிவுக்கு அழைத்து வந்தோம். பின்னர் அங்கு வைத்து முருகனை கத்தியால் குத்தினோம். இதில் அவர் நிலை குலைந்தார். பின்னர் கழுத்தை அறுத்துகொன்று விட்டு உடலை அங்குள்ள புதரில் போட்டு விட்டு சென்று விட்டோம். இந்த நிலையில் போலீசார் எங்களை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கைதான 2 பேரையும், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story