காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரியில் 3,452 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் - கே.பி.முனுசாமி எம்.பி. வழங்கினார்
காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி பகுதியில் 3 ஆயிரத்து 452 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை கே.பி.முனுசாமி எம்.பி. வழங்கினார்.
காவேரிப்பட்டணம்,
காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் 12 பள்ளிகளை சேர்ந்த 856 மாணவர்கள், 1,000 மாணவிகள் என மொத்தம் 1,856 மாணவ-மாணவிகளுக்கு ரூ.73 லட்சத்து 21 ஆயிரத்து 808 மதிப்பில் சைக்கிள்களை கே.பி.முனுசாமி எம்.பி. வழங்கினார்.
அதேபோல கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8 பள்ளிகளை சேர்ந்த 597 மாணவர்கள், 999 மாணவிகள் என மொத்தம் 1,596 மாணவ, மாணவிகளுக்கு ரூ.62 லட்சத்து 60 ஆயிரத்து 810 மதிப்பில் விலையில்லா சைக்கிள்களை கே.பி.முனுசாமி எம்.பி. வழங்கி பேசினார்.
விழாவில் அவர் பேசியதாவது:-
விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2001-2002-ம் கல்வி ஆண்டில் தொடங்கி வைத்தார். தற்போது அவர் வழியில் நடந்து வரும் அரசில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் மாணவ, மாணவிகளின் நலன் கருதி எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அரசு பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் மருத்துவ படிப்பு கனவை நனவாக்கும் வகையில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கினார். அதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்து வருகிறார்கள். விலையில்லா சைக்கிள்களை பெறும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு உரிய நேரத்தில் வந்து கல்வி கற்று சமுதாயத்தில் சிறந்த கல்வியாளர்களாக திகழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார், காவேரிப்பட்டணம் ஒன்றியக்குழு தலைவர் பையூர் ரவி, மாவட்ட ஆவின் தலைவர் குப்புசாமி, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் சுந்தரேசன், ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், முன்னாள் நகராட்சி தலைவர் தங்கமுத்து, நகர செயலாளர்கள் கேசவன், வாசுதேவன், அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story