ஏரிகளுக்கு மழைநீர் வரும் கால்வாய்களை தூர்வார வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


ஏரிகளுக்கு மழைநீர் வரும் கால்வாய்களை தூர்வார வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 Dec 2020 11:09 AM GMT (Updated: 30 Dec 2020 11:09 AM GMT)

தர்மபுரி மாவட்ட ஏரிகளுக்கு மழைநீர் வரும் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

அப்போது விவசாயிகள் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டு பருவமழை கணிசமாக பெய்து உள்ளது. இருந்தபோதிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு மழைநீர் முறையாக சென்று சேரவில்லை. இதனால் பெரும்பாலான ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு உள்ளன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மழைநீர் ஏரிகளுக்கு வரும் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும். மரவள்ளி கிழங்குக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் கரும்பு, மரவள்ளி கிழங்குக்கு உரிய விலை கிடைக்க முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசால் அறிவிக்கப்படும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கரும்பு சாகுபடி பரப்பை அதிகப்படுத்த விவசாயிகள் முயற்சிக்க வேண்டும். அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். விவசாயிகளின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, வேளாண் இணை இயக்குனர் வசந்தரேகா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் இளங்கோவன், உதவி கலெக்டர் தணிகாசலம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story