பொங்கல் பரிசு ரூ.2,500 கொடுப்பதை நிறுத்த தி.மு.க. சூழ்ச்சி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
அ.தி.மு.க. அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்பதால், பொங்கல் பரிசு ரூ.2,500 கொடுப்பதை நிறுத்த தி.மு.க. சூழ்ச்சி செய்வதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
நாமக்கல்,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இதையொட்டி நேற்று காலையில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் தங்க கவசத்தில் ஜொலித்த ஆஞ்சநேயரை தரிசனம் செய்தார்.
இதையடுத்து ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் சிறு வணிகர்களுடன் கலந்துரையாடியபோது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
சாதாரண மக்களுக்கு உதவிடும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டும் என்பதே இந்த அரசின் அடிப்படை நோக்கம் ஆகும். அந்த வகையில் சாலையோர வியாபாரிகளுக்கும், சிறு வணிகர்களுக்கும் ஏராளமான கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். குறிப்பாக மத்திய கூட்டுறவு வங்கி மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் வியாபாரிகளை மிரட்டும் எந்த நடவடிக்கையும் இருந்தது இல்லை. இனி எப்போதுமே இருக்காது.
2011-ம் ஆண்டுக்கு முன்பு இந்த நாமக்கல் நகரம் எப்படி இருந்தது என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஒவ்வொரு திட்டத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் தான், இந்த அரசு செய்துள்ள சாதனைகள் என்ன என்பது உங்களுக்கு தெரியவரும். வியாபாரிகளுக்கு அ.தி.மு.க. அரசு எப்போதும் துணை நிற்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து நாமக்கல் அருகே உள்ள பாப்பிநாயக்கன்பட்டியில் பொதுமக்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது :-
மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரும் பல்வேறு சாதனை திட்டங்களை தமிழகத்தில் செய்து உள்ளனர். அதனால் தான் அவர்கள் மறைந்த பிறகும் அவர்களது பெயர் நிலைத்து நிற்கிறது. அதே வழியில் நாங்களும் ஆட்சி செய்து வருகிறோம்.
நான் ஒருபோதும் என்னை முதல்-அமைச்சராக நினைத்து கொண்டது கிடையாது. எனக்கு மக்களாகிய நீங்கள் தான் முதல்-அமைச்சர். முதல்-அமைச்சர் நாற்காலி மீதும் எனக்கு ஆசை கிடையாது. கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால் கிராமங்கள் வளர்ச்சி அடைய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன்.
தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டு உள்ளது. மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சைக்கான செலவு தொகை ரூ.2 லட்சமாக இருந்ததை ரூ.5 லட்சமாக உயர்த்தி உள்ளேன்.
தமிழகம் முழுவதும் 73 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இன்றைக்கு ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, கடைக்கோடியில் வாழுகின்ற மக்களுக்கும் நன்மை செய்கின்ற ஒரே அரசு அ.தி.மு.க. அரசு. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையை அறிந்து, வருகின்ற பொங்கல் பண்டிகையை அனைவரும் சிறப்பாக கொண்டாடிட அ.தி.மு.க. அரசு, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக தலா ரூ.2,500 வழங்கப்படும் என்ற அறிவிப்பை கொடுத்து உங்களை சந்திக்கின்றேன்.
அதோடு முழுக்கரும்புடன் பொங்கல் தொகுப்பு கொடுத்து குடும்பத்தோடு அனைவரும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக கொண்டாட அரசு இந்த திட்டத்தை தொடங்கிவைத்துள்ளது. பொங்கல் பரிசை அறிவித்துள்ளது.
எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் இதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காக, இன்றைக்கு அ.தி.மு.க.வை சார்ந்தவர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கி வருகிறார்கள் என்ற பொய்யான செய்தியை பரப்பிவருகிறார். ஏன் என்று சொன்னால், இந்த திட்டம் மக்களிடத்திலே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருகிறது. இந்த திட்டம் நிறைவேறி விட்டால், அ.தி.மு.க. அரசுக்கு நல்ல பெயர் வந்து விடும் என்ற எண்ணத்திலே, இந்த திட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும். அதற்கு சூழ்ச்சி செய்து நேற்றைய தினமே பொய்யான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
அ.தி.மு.க.வை பொறுத்த வரைக்கும் கடந்த ஆண்டு குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்கப்பட்டது. அப்போது அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக நீதிமன்றம் சென்ற கட்சிதான் தி.மு.க. என்பதை இந்த நேரத்திலே நினைவுகூற கடமைப்பட்டிருக்கிறேன். மக்களுக்கு நல்லது செய்யும் எதுவும் தி.மு.க.வுக்கு பிடிக்காது. ஆகவே, இன்றைக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அந்த மக்கள் சிறப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பதற்காக குடும்ப அட்டைக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்ற அறிவிப்பை அறிவித்து, வருகின்ற 4-ந் தேதி முதல் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2500 மற்றும் பொங்கல் தொகுப்பும் வழங்கப்படும். நாங்கள் கொடுத்து, கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்கள். ஆனால் எடுத்து, எடுத்து பழக்கப்பட்ட இயக்கம் தி.மு.க.
தேர்தல் நெருங்கி வருவதால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டும் என்றே திட்டமிட்டு எங்களது அரசு மீது அவதூறு பிரசாரம் செய்து வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அவர் ஒரு வாக்குறுதி கொடுத்தார். 5 பவுனுக்கு கீழ் நகை அடமானம் வைத்தால் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.
ஆட்சியில் நாங்கள் இருக்கும்போது அவர் எப்படி தள்ளுபடி செய்வார். அவர் சொல்வது பச்சை பொய். கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்து வெற்றி பெற்ற அவர்கள் தற்போது என்ன திட்டத்தை கொண்டு வந்தார்கள் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். எனவே தமிழக மக்கள் வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, மீண்டும் எங்களது ஆட்சி அமைய ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் பிரசாரத்தின்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ.,மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.
முன்னதாக முதலைப்பட்டி அருந்ததியர் தெருவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடு, வீடாக சென்று அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார். நாமக்கல் நகருக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வந்த முதல்-அமைச்சரை சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்றனர்.
Related Tags :
Next Story