ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கூடுதலாக 5,740 பயனாளிகள் - கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தகவல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கூடுதலாக 5 ஆயிரத்து 740 பயனாளிகளின் பெயர் பட்டியல் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளதாக கலெக்டர் தொிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை,
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் (ஊரகம்) கீழ் ஒரு வீட்டுக்கான அலகு தொகை ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். இதில் மத்திய அரசின் பங்குத் தொகை ரூ.72 ஆயிரம் (60 சதவீதம்), மாநில அரசின் பங்குத் தொகை ரூ.48 ஆயிரம் (40 சதவீதம்) ஆகும். இத்துடன் கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்காக தமிழக அரசு கூடுதல் நிதியாக ரூ.50 ஆயிரம் ஒவ்வொரு வீட்டுக்கு அளித்து வருகிறது. அதன் மூலம் ஒவ்வொரு வீட்டு்க்கும் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் வழங்கப்பட்டது.
ஏழை எளிய மக்களின் கனவான, குடியிருப்பு வீடு கட்டுவதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் தற்போது ஒவ்வொரு வீட்டுக்கும் அலகு தொகை ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் ஆக உயர்த்திட உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் தொகையுடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.23 ஆயிரத்து 40 மற்றும் தனிநபர் இல்ல கழிப்பறை கட்ட ரூ.12 ஆயிரத்தை சேர்த்து மொத்தம் ஒரு வீட்டுக்கு ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்து 40 நிதி உதவி வழங்கப்படும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் (ஊரகம்) கீழ் ஏற்கனவே 6,005 தகுதியான நபர்களுக்கு வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. கூடுதலாக தகுதியான பயனாளிகள் பயன் பெறும் வகையில் அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் சமூக பொருளாதார, சாதி வாரியான கணக்கெடுப்பில் மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 5 ஆயிரத்து 740 தகுதியான நபர்களின் பெயர் பட்டியல், சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஏற்கனவே ஒட்டப்பட்டுள்ளது.
பெயர் பட்டியலில் உள்ள தகுதியான நபர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கீழ்கண்ட ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம் அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொள்ளலாம்.
வீட்டுமனை பட்டா நகல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டை நகல். கூடுதல் பயனாளிகள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மூலம் பதிவு செய்து ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமின்) திட்டத்தின் கீழ் இலவச வீடுகள் பெற்றுப் பயன்பெறலாம்.
இந்தத் தகவலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story