பா.ஜ.க. விரித்த வலையில் இருந்து ரஜினி வெளியே வந்துவிட்டார் - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி


பா.ஜ.க. விரித்த வலையில் இருந்து ரஜினி வெளியே வந்துவிட்டார் - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 30 Dec 2020 5:39 PM IST (Updated: 30 Dec 2020 5:39 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க.விரித்த வலையில் இருந்து ரஜினி வெளியே வந்து விட்டார், என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் நேற்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்று தான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வந்தேன். அவருக்கு அரசியலில் நாட்டம் இல்லை. காரணம் ஆன்மிகத்தை விரும்புகிறவர்கள் தேர்தல் அரசியலை விரும்ப மாட்டார்கள். பா.ஜ.க. மிகுந்த அழுத்தம் கொடுத்து ரஜினியின் மனதையும் கெடுத்து, உடல் நலத்தையும் கெடுத்து விட்டது.

இது, பா.ஜ.க.வின் மகத்தான தோல்வியாகும். ரஜினியை கட்சி ஆரம்பிக்க வைத்து அ.தி.மு.க. அரசுக்கு எதிரான வாக்குகள் பெற வைத்து அ.தி.மு.க.வை எளிதில் வெற்றி பெற செய்து விடலாம் என்று தவறான கணக்கு போட்டது. அது, தவறான கணக்கு. ரஜினி ஏதோ ஒரு வகையில் பா.ஜ.க. விரித்த வலையில் இருந்து வெளியே வந்து விட்டார். அவருக்கு எனது பாராட்டு.

அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை பா.ஜ.க. தலைமை தான் முடிவெடுக்கும் என்று பா.ஜ.க தலைவர்கள் சொல்வது அவர்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியை அளிக்கலாம். ஆனால் அ.தி.மு.க.விற்கும், அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மகிழ்ச்சியளிக்காது.

இப்படி அவர்கள் சொல்வதினால் தங்களது சுயமரியாதையை இழந்து நிற்கும் அ.தி.முக. மோசமான சூழ்நிலையை அடையும். அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க. எவ்வாறு முடிவு செய்ய முடியும், இதனை அ.தி.மு.க.வினர் எவ்வாறு ஏற்றுக்கொள்கின்றனர் என்பது எனக்கு தெரியவில்லை. எங்களது கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி.

இந்த முறை கொள்கைகளுக்காக மக்கள் வாக்களிப்பார்களே தவிர தனி மனிதர்களுக்காக வாக்களிக்க மாட்டார்கள். ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்து இருந்தாலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெற்று இருக்கும்

நரேந்திரமோடி ஓரு சர்வாதிகாரி. கடந்த 30 நாட்களுக்கு மேலாக கொட்டுகின்ற பனியில் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராடி வருகின்றனர். உலகிலேயே விவசாய குடும்பங்கள் வன்முறையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராடும் விவசாயிகள் அகிம்சை வழியில் போராடி வருகின்றனர். இதை மோடி புறக்கணிக்கலாம், ஆனால் இதன் விளைவு மக்கள் மோடியை புறக்கணிப்பார்கள்.

விவசாயிகள், புயலால் பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் நிவாரணம் வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளனர். ஆனால் அப்போது தமிழக அரசு உதவாமல் வழங்காமல் தற்போது பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்குவது மிகப் பெரிய ஊழல்.

தேர்தலில் வாக்குகளை பெருவதற்கும், ஏழை மக்களின் மனதை மாற்றுவதற்காக இந்தப் பணத்தை வழங்குகின்றனர். இது மிகவும் தவறு. இதனை தேர்தல் ஆணையம் நன்கு கவனித்துக்கொண்டு இருக்கிறது. தேர்தல் நேரத்தில் இது போன்று செய்வது மிகவும் தவறானது.

குஷ்புவை விட உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றாகவே அரசியல் தெரியும். அவர், ஒரே கட்சியில் இருக்கிறார். குஷ்பு பல்வேறு கட்சிகளை மாறுகிறார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளேன். தற்போது வரையில் கொரோனா தொற்றிற்கு மருந்து கண்டுபிடிக்கும் வரையில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட தலைவர் செங்கம் குமார், நகர தலைவர் வெற்றிசெல்வன், மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தமிழ்அரசு, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மோகன், மாநில ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் காமராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story