வத்திராயிருப்பு அருகே ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது


வத்திராயிருப்பு அருகே ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
x
தினத்தந்தி 30 Dec 2020 8:12 PM IST (Updated: 30 Dec 2020 8:12 PM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பு அருகே ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

வத்திராயிருப்பு,

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி பசும்பொன் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன்.

இவர் தனது தந்தை இறந்த நிலையில் அவரின் பெயரில் உள்ள காலி இடத்தை தனது பெயரில் மாற்றுவதற்காக பட்டா கோரி வ.புதுப்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் பட்டா வழங்காமல் அவரை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலரான சிவராமலிங்கம் (வயது 51) பட்டா வழங்குவதற்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. அனைத்து சான்றிதழ்களும் சரியாக இருந்தும் பட்டா வழங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டதால் மகேந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத அவர் இது தொடர்பாக விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின்படி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகள் 3 ஆயிரத்தை வ.புதுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சிவராமலிங்கத்திடம், மகேந்திரன் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலரை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story