பெரியகுளத்தில் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பெயரில் ரூ.1¼ கோடி கடன் பெற்று மோசடி - விவசாய ஆர்வலர் குழு தலைவருக்கு வலைவீச்சு


பெரியகுளத்தில் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பெயரில் ரூ.1¼ கோடி கடன் பெற்று மோசடி - விவசாய ஆர்வலர் குழு தலைவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 30 Dec 2020 9:48 PM IST (Updated: 30 Dec 2020 9:48 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பெயரில் ரூ.1¼ கோடி கடன் பெற்று மோசடி செய்த விவசாய ஆர்வலர் குழு தலைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேனி,

பெரியகுளம் அருகே வடுகபட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் ‘இமை முல்லை விவசாய ஆர்வலர் குழு' என்ற பெயரில் சுயஉதவிக்குழுவை தொடங்கி அதன் தலைவராக உள்ளார். இவர் சில்வார்பட்டி ஒத்தவீடு பகுதியில் வசித்து வரும் ஜெயப்பாண்டி மனைவி வனிதாவிடம், தன்னுடைய குழுவின் மூலம் ஏழை-எளிய விவசாயிகளுக்கு வட்டியின்றி கறவை மாட்டிற்கு கடன் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இதை நம்பிய வனிதா மற்றும் அதே ஊரைச் சேர்ந்த 9 பேர் குழுவாக இணைந்து, கடன் வாங்குவதற்காக ராஜ்குமார் கேட்ட ஆவணங்களை அவரிடம் கொடுத்தனர். ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ஒரு வாரத்தில் கடன் பெற்று தருவதாக கூறினார். இதற்காக சில ஆவணங்களில் அவர்களிடம் கையொப்பம் வாங்கியுள்ளார். இதற்கிடையே குறிப்பிட்ட நேரத்தில் கடன் வாங்கிக் கொடுக்காததால் வனிதா மற்றும் சிலர் ராஜ்குமாரை சந்தித்து கேட்டுள்ளனர். அப்போது கடன் பெற இயலவில்லை என்று கூறியுள்ளார். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் சென்று விட்டனர்.

இந்தநிலையில், வனிதா உள்ளிட்டவர்கள் அங்கம் வகிக்கும் குழுவுக்கு ரூ.6 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதை திருப்பிச் செலுத்துமாறும் தேனியில் உள்ள ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் இருந்து அவர்களுக்கு நோட்டீஸ் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ராஜ்குமாரை சந்திக்கச் சென்றனர். ஆனால், அங்கு அவர் நடத்தி வந்த அலுவலகம் பூட்டிக் கிடந்தது.

பின்னர் அவர்கள் விசாரித்த போது, ராஜ்குமார் இதேபோன்று சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நபர்களிடம் ஆவணங்களை பெற்று அவர்களின் பெயரில் தேனியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1 கோடியே 20 லட்சம் கடன் வாங்கி விட்டு தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வனிதா புகார் செய்தார்.

இந்த புகார் மீது விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பாண்டிச்செல்வம் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து ரூ.1 கோடியே 20 லட்சம் மோசடி செய்த ராஜ்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story