தேனி அருகே பூதிப்புரத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் நிரம்பாத கண்மாய் - விவசாயிகள் கவலை
தேனி அருகே பூதிப்புரத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதிலும் கண்மாய் நிரம்பாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தேனி,
தேனி அருகே பூதிப்புரத்தில் ராஜபூபால சமுத்திரம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் சுமார் 121 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த கண்மாய்க்கு வாழையாற்றில் இருந்து தண்ணீர் வருவது வழக்கம். இதற்காக வாழையாத்துப்பட்டியில் வயல்வெளிகளுக்கு நடுவில் ஓடும் வாழையாற்றில் தடுப்பணை அமைத்து, மதகு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த மதகு வழியாக கண்மாய்க்கு தண்ணீர் வரும்.
இந்த கண்மாய் நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் இருந்தது. விவசாயிகளின் தொடர் கோரிக்கையின் பலனாக கடந்த ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பில் இந்த கண்மாய் தூர்வாரப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பின்பு கண்மாய் தூர்வாரப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில், கண்மாய்க்கு கூடுதல் தண்ணீர் வருவதற்கு ஏதுவாக ஆற்றில் அமைத்துள்ள தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால், தடுப்பணை உயரம் உயர்த்தப்படவில்லை. இதனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் கண்மாய்க்கு குறைவான அளவிலேயே தண்ணீர் வரத்து ஏற்பட்டது.
அந்த வகையில் கடந்த சில மாதங்களாக இந்த மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் கண்மாய்க்கு நீர்வரத்து ஏற்பட்டது. ஆனாலும், கண்மாய்க்கு வந்த தண்ணீரை விடவும், தடுப்பணையை தாண்டி ஆற்றில் தான் அதிக தண்ணீர் ஓடியது. வாழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதிலும் இந்த கண்மாய் நிரம்பவில்லை. தற்போது ஆற்றிலும் நீர்வரத்து நின்று விட்டது. மலையடிவார பகுதியில் இருந்து நீர்வரத்து உள்ள போதிலும், பலரும் மோட்டார்கள் மூலம் தண்ணீர் திருடுவதால் கண்மாய்க்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால், தூர்வாரப்பட்ட கண்மாய் நிரம்பாமல் விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது. எனவே, தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கவும், ஆற்றில் தண்ணீர் திருட்டை தடுத்து, ஆற்றுப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story