விருவீடு அருகே, கள்ளக்காதல் தகராறில் பெண் கல்லால் அடித்துக்கொலை - தொழிலாளி கைது
விருவீடு அருகே கள்ளக்காதல் தகராறில் பெண்ணை கல்லால் அடித்து கொன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
வத்தலக்குண்டு,
விருவீடு அருகே உள்ள சந்தையூர் ஊராட்சி ராஜதானிகோட்டையை சேர்ந்த லோகநாதன் மனைவி ரேகா (வயது 42). இவர்களுக்கு பிரகாஷ் என்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். லோகநாதன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விருவீடு அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியான முருகன் (43) என்பவருடன் ரேகாவுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. முருகனுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக ரேகா, தனது மகன் வளர்ந்து விட்டான் என்றும், இனி கள்ளத்தொடர்பை நிறுத்தி விடலாம் என்றும், தனக்கு பணம் கொடுக்குமாறும் கேட்டார். இதைத்தொடர்ந்து ரேகாவும், முருகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிரகாஷ் தனது தாயார் ரேகாவை காணவில்லை என்று விருவீடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். இதனிடையே ராஜதானிகோட்டை அருகே உள்ள கரட்டுபகுதியில் தலையில் கல்லால் அடித்த காயத்தோடு ரேகா உடலில் ஆடையின்றி பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் நேற்று அங்கு சென்று அழுகிய நிலையில் கிடந்த அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் ரேகாவை உல்லாசமாக இருக்கலாம் என முருகன் கரட்டு பகுதிக்கு அழைத்து சென்று அவரை தலையில் கல்லால் அடித்து கொலை செய்தது தெரிந்தது.
இதையடுத்து முருகனை போலீசார் நேற்று கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story