சென்னை வியாசர்பாடியில் கஞ்சா கடத்தி விற்ற சினிமா இயக்குனர் கைது; நண்பர்கள் 3 பேரும் சிக்கினர்
வியாசர்பாடியில் ஆட்டோவில் கஞ்சா கடத்தி விற்ற சினிமா இயக்குனர் மற்றும் அவரது 3 நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா கடத்தல்
சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வியாசர்பாடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வியாசர்பாடி அசோக்பில்லர் பகுதியில் வேகமாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டினர்.
ஆனால் அந்த ஆட்டோ நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் போலீசார், சிறிது தூரம் விரட்டிச்சென்று அந்த ஆட்டோவை மடக்கிப்பிடித்தனர். அந்த ஆட்டோவை சோதனை செய்தபோது இருக்கைக்கு அடியில் கஞ்சாவை பதுக்கி வைத்து கடத்தியது இருந்தது.
சினிமா இயக்குனர்
இதையடுத்து ஆட்டோவில் இருந்த 4 பேரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் அவர்கள், அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் ஐ.சி.எப். காலனியை சேர்ந்த பொன் முருகேசன் (வயது 43) மற்றும் அவருடைய நண்பர்களான முகப்பேர் பகுதியைச் சேர்ந்த பத்மநாபன் (30), மணிமாறன் (43), ராஜா என்ற மனோகரன் (36) என்பது தெரியவந்தது.
இவர்களில் பொன் முருகேசன், சினிமா இயக்குனர் ஆவார். தற்போது "மவுனமே காதலாய்" என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
சினிமா இயக்குனர் வேலை நேரம் தவிர மீதி நேரத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டோவில் கஞ்சா கடத்தி பாடி, அம்பத்தூர், வியாசர்பாடி பகுதியில் விற்றதும் தெரிந்தது. இவர்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story