ரெயில் முன்பு பாய்ந்து உயிரை மாய்த்து கொண்டார் கர்நாடக மேல்-சபை துணைத்தலைவர் தர்மேகவுடா தற்கொலை
கர்நாடக மேல்-சபை துணைத்தலைவர் தர்மேகவுடா ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அவர் மேல்-சபை ேமாதல் காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிக்கமகளூரு,
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா சக்கராயப்பட்டணாவை சேர்ந்தவர் தர்மேகவுடா. அவருக்கு வயது 65. ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த இவர், கர்நாடக மேல்சபை துணைத்தலைவராக இருந்தார். கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சி கூட்டணியில் இருந்தபோது, மேல்-சபை தலைவர் பதவி காங்கிரசுக்கும், துணைத்தலைவர் பதவி ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவருக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் மேல்-சபை துணைத்தலைவராக தர்மேகவுடா நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், கூட்டணி ஆட்சி கவிழ்ந்து தற்போது பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் மேல்-சபையில் தலைவர் பதவியில் காங்கிரசை சேர்ந்தவர் இருப்பதால், பா.ஜனதா அரசு கொண்டு வரும் அவசர சட்டத்தை நிைறவேற்ற முடிவதில்லை. இதனால், மேல்-சபை தலைவருக்கு எதிராக பா.ஜனதாவினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்தனர். இதற்கு ஜனதாதளம்(எஸ்) கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.
அதன்படி கடந்த 15-ந்தேதி பா.ஜனதாவினர் மேல்-சபை தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயன்றனர். ஆனால் அன்றைய தினம் மேல்-சபை தலைவர் அவைக்கு வரவில்லை. இதனால் துணைத்தலைவர் தர்மேகவுடா, தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்த முயன்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனையும் மீறி அவையை நடத்த முயன்ற தர்மேகவுடாவை தலைவர் இருக்கையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியே சென்றனர். இதனை தடுக்க முயன்ற பா.ஜனதாவினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் உண்டானது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சக்கராயப்பட்டணாவில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் தர்மேகவுடா வெளியே சென்றார். அப்போது பாதுகாவலர்கள் யாரையும் அவர் அழைத்து செல்லவில்லை. டிரைவர் மட்டும் அவருடன் சென்றார். பின்னர் மாலை 6 மணிக்கு பிறகு நண்பரை சந்திக்க இருப்பதாக கூறி டிரைவரையும் அவர் திருப்பி அனுப்பிவிட்டார்.
இந்த நிலையில் இரவு வெகு நேரமாகியும் தர்மேகவுடா வீட்டுக்கு திரும்ப வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் செல்போனில் தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து சக்கராயப்பட்டணா போலீசாருக்கு அவருடைய குடும்பத்தினர் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார், தர்மேகவுடாவின் செல்போன் சிக்னலை வைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, கடூா் தாலுகா குணசாகரா அருகே மங்கனஹள்ளியில் செல்போன் சிக்னல் காண்பித்தது. அங்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தில் தர்மேகவுடா தலை தனியாக, உடல் தனியாக பிணமாக கிடந்தார்.
இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது, நேற்று முன்தினம் மாலை தர்மேகவுடா தனது நண்பர் ஒருவரை செல்போனில் தொடர்புகொண்டு கடூரில் இருந்து ரெயில் வரும் நேரத்தை கேட்டுள்ளது தெரியவந்தது. இதனால் தர்மேகவுடா மங்கனஹள்ளி பகுதியில் வைத்து நேற்று அதிகாலை 2 மணி அளவில் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மேலும் அவர் எழுதிய உருக்கமான கடிதமும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. ஆனால் அந்த கடிதத்தில் என்ன உள்ளது என்பது பற்றி தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.
சிவமொக்கா மெக்கான் அரசு ஆஸ்பத்திரியில் தர்மேகவுடாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வெளியே அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தேசிய கொடி போர்த்திய அவருடைய உடலுக்கு மந்திரி பைரதி பசவராஜ், ராகவேந்திரா எம்.பி., சிவமொக்கா கலெக்டர் சிவக்குமார், போலீஸ் சூப்பிரண்டு சாந்தராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து அவருடைய உடல் சக்கராயப்பட்டணாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்குள்ள அவருடைய வீட்டில் தர்மேகவுடாவின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவருடைய உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் கதறி அழுதனர். தர்மேகவுடாவின் மறைவுக்கு, எச்.டி.தேவேகவுடா, குமாரசாமி, முதல்-மந்திரி எடியூரப்பா, சித்தராமையா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தர்மேகவுடா மறைவு செய்தி கேட்டதும், முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டார். பின்னர் அவர், பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சக்கராயப்பட்டணாவுக்கு சென்றார். பின்னர் அவர், தர்மேகவுடாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, குமாரசாமி, துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தர்மேகவுடாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதையடுத்து இறுதிச்சடங்கு முடிந்ததும் தர்மேகவுடாவின் உடல் சக்கராயப்பட்டணாவில் உள்ள அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து தர்மேகவுடாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது துப்பாக்கி குண்டுகள் முழுங்கப்பட்டன.
தற்கொலை செய்துகொண்ட தர்மேகவுடாவுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு எம்.எல்.சி.யாக தர்மேகவுடா தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது குமாரசாமி தலைமையில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்தபோது, 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் மேல்சபை தலைவராக காங்கிரசை சேர்ந்த பிரதாப் சந்திர ஷெட்டியும், துணைத்தலைவராக தர்மேகவுடாவும் நியமிக்கப்பட்டனர்.
கடந்த 16-ந்தேதி தான் தர்மேகவுடா தனது 65-வது பிறந்த நாளை கொண்டாடினார். மென்மையாக பேசும் தர்மேகவுடா, அரசியலில் சக்திவாய்ந்த ஒக்கலிக்க சமூகத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை எஸ்.ஆர்.லட்சுமய்யா 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். இவருடைய சகோதரர் போஜேகவுடா எம்.எல்.சி.யாக உள்ளார். ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவர் எச்.டி.குமாரசாமியின் நெருங்கிய ஆதரவாளராக தர்மேகவுடா இருந்தார்.
கர்நாடக மேல்சபை கூட்டத்தில் நடந்த மோதல் சம்பவத்தால் அவர் மனமுடைந்து காணப்பட்டதாகவும், அதனால் அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இ்துகுறித்து சக்கராயப்பட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடக மேல்சபை துணைத்தலைவர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story