வையம்பட்டி அருகே கொண்டைக்கடலை வழங்காததால் ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்


வையம்பட்டி அருகே கொண்டைக்கடலை வழங்காததால் ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 31 Dec 2020 1:41 AM GMT (Updated: 31 Dec 2020 1:41 AM GMT)

வையம்பட்டி அருகே ரேஷன் கடையில் கொண்டைக்கடலை வழங்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வையம்பட்டி,

வையம்பட்டி அருகே பழையகோட்டை ஊராட்சிக்குட்பட்ட புறத்தாக்குடியில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் பி.குரும்பபட்டியைச் சேர்ந்த கிராம மக்கள் தங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்வார்கள்.

தற்போது ரேஷன் கடையில் ஒரு குடும்ப அட்டைக்கு 5 கிலோ கொண்டைக்கடலை அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பி.குரும்பபட்டி பகுதி மக்களுக்கு இதுவரை கொண்டைக்கடலை வழங்கவில்லை.

ரேஷன் கடை முற்றுகை

இதுபற்றி அப்பகுதி மக்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டதற்கு முறையாக பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை அந்த ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடை திறக்கப்படவில்லை.

பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த பழைய கோட்டை ஊராட்சி தலைவர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் அங்கிருந்த ஊழியர்களிடமும் கேட்டார். இருப்பினும் முறையான தகவல் இல்லை. இதனால் மேலும் ஆத்திரமடைந்த மக்கள் அங்குள்ள கூட்டுறவு வங்கியையும் பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டைக்கடலை வந்து விட்டது. அனைவருக்கும் வழங்கப்படும் என்று கூறினர்.

இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story