தற்கொலை செய்த மேல்-சபை துணைத் தலைவர் தர்மேகவுடா எழுதிய உருக்கமான கடிதம் மனவேதனையில் இந்த முடிவை தேடுகிறேன்
தற்கொலை செய்த மேல்-சபை துணைத் தலைவர் தர்மேகவுடா மனவேதனையில் இந்த முடிவை தேடிக்கொள்வதாக உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார்.
சிக்கமகளூரு,
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா சக்கராயப்பட்டணாவை சேர்ந்தவர் தர்மேகவுடா (வயது 65). ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த இவர் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சியின் போது கர்நாடக மேல்-சபை துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மேல்-சபை தலைவராக பிரதாப் சந்திரெஷெட்டி உள்ளார். இந்தநிலையில் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. இருப்பினும் மேல்-சபையில் ஆளும் பா.ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை இல்லை.
இதற்கிடையே, மேல்-சபை தலைவருக்கு எதிராக கடந்த 15-ந்தேதி நம்பிக்கை இல்லா தீர்மானம் பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது மேல்-சபை தலைவர் இருக்கையில் அமர வந்த தர்மேகவுடாவை, காங்கிரசார் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். மேலும் காங்கிரஸ், பா.ஜனதாவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது கர்நாடக அரசியல் வரலாற்றில் நடக்காத நிகழ்வாக பேசப்பட்டது.
இந்த நிலையில் தர்மேகவுடா கடந்த 29-ந்தேதி அதிகாலை 2.30 மணி அளவில் கடூர் தாலுகா குணசாகரா அருகே மங்கனஹள்ளியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் வந்த ஜனசதாப்தி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். கர்நாடக மேல்-சபையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது நடந்த சம்பவத்தால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கடூர் போலீசாரும், அரிசிகெரே ரெயில்வே போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை செய்துகொண்ட தர்மேகவுடா, தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு கடிதத்தை அவர் தனது காரில் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி இருந்தனர். தற்போது அந்த கடிதத்தில் தர்மேகவுடா எழுதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது, அந்த கடிதத்தில், நான் பல்வேறு மனவேதனையில் உள்ளேன். உங்களை (குடும்பத்தினரை) விட்டு செல்ல எனக்கு மனமில்லை. நீங்கள் அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும். புதியதாக கட்டப்படும் வீட்டை நல்ல முறையில் கட்டி முடிக்க வேண்டும். எனக்கு ஏற்பட்ட மனவேதனைகளால் நான் இந்த முடிவை தேடிக்கொள்கிறேன் என்று உருக்கமாக அவர் கூறியுள்ளார்.
இதனால் தர்மேகவுடாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story