அமலாக்கத்துறை விசாரணைக்கு ஏக்நாத் கட்சே ஆஜராகவில்லை கொரோனா அறிகுறி இருப்பதாக கூறி காலஅவகாசம் கேட்டார்
கொரோனா அறிகுறி இருப்பதாக கூறி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவதை முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே தவிர்த்தார்.
மும்பை,
முந்தைய பா.ஜனதா ஆட்சியில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு அடுத்த இடத்தில் மந்திரியாக பதவி வகித்தவர் ஏக்நாத் கட்சே.
பதவியில் இருந்தபோது புனே போசிரி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை மனைவியும், மருமகனும் வாங்குவதற்காக அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் வருமான வரி துறையினர் இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்தினர். ஆனால் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை.
இருப்பினும் அவர் பா.ஜனதாவில் ஓரங்கட்டப்பட்டார். தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இதனால் பா.ஜனதா மீது அதிருப்தி அடைந்த அவர் கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் தேசியவாத காங்கிரசில் இணைந்தார்.
இந்த நிலையில் குடும்பத்தினருக்கு இடம் வாங்கிய விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை ஏக்நாத் கட்சேவுக்கு சம்மன் அனுப்பியது. அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் தனக்கு கொரோனா அறிகுறி உள்ளதால் விசாரணைக்கு ஆஜராகவில்லை என முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“எனக்கு கடந்த 28-ந்தேதி முதல் காய்ச்சல், சளி மற்றும் வறட்டு இருமல் உள்ளது. இவை கொரோனாவுக்கான அறிகுறிகள் என்பதால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளேன். அதற்கான முடிவு வருவதற்காக காத்திருக்கிறேன். மருத்துவ ஆலோசனைப்படி நான் 14 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும்.
இதுகுறித்து நான் அமலாக்கத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளேன். அதிகாரிகள் எனக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்க ஒப்புக்கொண்டனர். உடல்நலம் தேறியதும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story