தஞ்சையில் நடந்த சர்க்கரை ஆலை பேரவை கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு


தஞ்சையில் நடந்த சர்க்கரை ஆலை பேரவை கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 31 Dec 2020 8:23 AM IST (Updated: 31 Dec 2020 8:23 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் நடந்த குருங்குளம் சர்க்கரை ஆலை பேரவை கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். அப்போது அவர்கள் கரும்புக்கு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்து குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் 45-வது பேரவைக்கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சர்க்கரை துறை ஆணையர் அனந்தகுமார் தலைமை தாங்கினார். இதில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி செல்வசுரபி மற்றும் சர்க்கரை ஆலை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கோவிந்தராஜ் பேசுகையில், கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் விலை நிர்ணயிக்க வேண்டும். விவசாயிகளுக்கு விதை கரும்புகளை இலவசமாக வழங்க வேண்டும். கரும்பு வெட்டுக்கூலியை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும். ஊழல் செய்யும் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய வேண்டும். ஆனால் உயர் அதிகாரிகள் அதனை கண்டுகொள்வதில்லை’’என்றார்.

ஏமாற்றம்

காவிரி டெல்டா விவசாயிகள் சங்க செயலாளர் ரவிச்சந்தர் பேசுகையில், தீபாவளி பண்டிகை இனிப்புகள் தயார் செய்ய சர்க்கரைக்கு நாங்கள் உற்பத்தி செய்யும் கரும்பு தான் பயன்படுத்தப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு வெல்லம் தயாரிக்கவும் நாங்கள் தயார் செய்யும் கரும்பு தான் பயன்படுத்தப்படுகிறது. வரவு- செலவு தொடர்பான நிதி நிலை அறிக்கை புத்தகமும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் இந்த கூட்டம் குறித்து ஆலை விவசாயிகள் பாதிபேருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்’’என்றார். இதே போல் பேசிய கரும்பு விவசாயிகளும் கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். விதை கரும்புகளை இலவசமாக வழங்க வேண்டும் என கூறினர். ஆனால் இதற்கு சர்க்கரைத்துறை ஆணையர் ஓரிரு வார்த்தையில் பதில் கூறி முடித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

விவசாயிகள் வெளிநடப்பு

இதில் திருப்தி அடையாத விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதில் கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராமசாமி, பொருளாளர் அண்ணாதுரை, துணை செயலாளர் ராஜகுமார், கரும்பு விவசாயிகள் விஜயகுமார், பிரதீப் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கரும்புக்கு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் விலை அறிவிக்க வேண்டும் என்றும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கோ‌‌ஷங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
1 More update

Next Story