தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்


தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
x
தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
தினத்தந்தி 31 Dec 2020 8:54 AM IST (Updated: 31 Dec 2020 8:54 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சங்கரராமேசுவரர் கோவில்
தூத்துக்குடியில் உள்ள பிரதான கோவில்களில் சங்கரராமேசுவரர் கோவில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவாதிரை திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு பூஜைகள் நடந்தன. நேற்று திருவாதிரை திருவிழா நடந்தது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தன.

ஆருத்ரா தரிசனம்
பின்னர் விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஆருத்ரா தரிசனம் நடந்தது. பின்னர் பசுதீபாராதனை, தாண்டவ தீபாராதனை, திருமுறை பாடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் நடராஜர் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

கோவில்பட்டி
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதர் சுவாமி கோவிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை ஒட்டி அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, நடராஜ பெருமாள்- சிவகாமி அம்மாள் மற்றும் மாணிக்கவாசக சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து ஆருத்ரா தரிசனம் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து செய்திருந்தார்

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரேஸ்வரி புற்றுக்கோவிலில் நேற்று காலை 5.30 மணிக்கு சிவன் சன்னதியில் நடராஜர் அலங்கரிக்கப்பட்டு கோமாதா பூஜையுடன், ஆருத்ராதரிசன நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆறுமுகநேரி
ஆறுமுகநேரி சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் திருவாதிரை விழாவை முன்னிட்டு நேற்று ஆருத்ரா தரிசனம் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து இரவில் நடராஜரின் சப்பர பவனியும் நடைபெற்றது. முன்னதாக கோவிலில் சிறப்பு பூஜை நடந்து. பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஆறுமுகநேரி லட்சுமி மாநகரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த நடராஜர் கோவிலில் தேவார பக்தஜன சபையின் சார்பில், 130-வது ஆண்டு திருவாதிரை விழா கடந்த 21-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி தினமும் காலையில் சிறப்பு பூஜையும் வீதி பாராயணமும், பஜனையும், திருவம்பாவையும் பாடி, மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. 9-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு மாலையில் சொற்பொழிவும், இரவில் சிறப்பு பூஜையும் நடந்தது. இரவு பூஞ்சப்பரத்தில் நடராஜர் எழுந்தருளி வீதி உலா வந்தார். அவருடன் மாணிக்கவாசக சுவாமிகளின் சப்பரமும் சென்றது. முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் நடராஜர் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறுவர், சிறுமியர் பஜனை பாடி வந்தனர்.

இதேபோல் ஆறுமுகநேரி விநாயகர் கோவில் தெருவில் அமைந்துள்ள சைவசித்தாந்த சங்கத்தின் சார்பில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு நடராஜர் சப்பர பவனி நடைபெற்றது. அதிகாலையில் இது நிறைவுபெற்றது. தொடர்ந்து ஆருத்ரா தரிசனமும், சிறப்பு பூஜையும், நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கயத்தாறு
கயத்தாறில் திருநீலகண்டேஸ்வரர் திருமலை நாயகி அம்பாள் திருக்கோவிலில், நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கி 21 அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்றன. கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் வந்து கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல் கயத்தாறு அகிலாண்டேஸ்வரி சமேத கோதண்டராமேஸ்வரர் கோவிலிலும் ஆருத்ரா தரிசனம் நடந்தது.

Next Story