கடலில் நின்று ‘செல்பி' எடுத்த 2 பேரை ராட்சத அலை இழுத்து சென்றது கதி என்ன? தேடும் பணி தீவிரம்


கடலில் நின்று ‘செல்பி எடுத்த 2 பேரை ராட்சத அலை இழுத்து சென்றது கதி என்ன? தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 31 Dec 2020 4:00 AM GMT (Updated: 31 Dec 2020 4:00 AM GMT)

கடலில் நின்று ‘செல்பி' எடுத்த போது மாணவர் உள்பட 2 பேரை ராட்சத அலை இழுத்து சென்றது. அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.

கருங்கல்,

குமரி மாவட்டம் கருங்கல் அருகே கப்பியறை ஓலவிளை பகுதியை சேர்ந்த செல்வம் மகன் ஜிபின் (வயது 25). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக அவர் சொந்த ஊருக்கு நண்பர்கள் சிலருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை ஆலஞ்சி பாரியக்கல் கடற்கரைக்கு அவர்கள் சென்றனர். அங்கு கடலில் அழகை ரசித்த அவர்கள் ஆர்வமிகுதியில் கடலின் உள்ளே சென்றனர். அதாவது, அங்குள்ள பாறையில் நின்று ‘செல்பி' எடுத்தபடி இருந்தனர்.

ராட்சத அலை இழுத்து சென்றது

இந்தநிலையில் கடலில் இருந்து எழுந்த ராட்சத அலை அவர்கள் மீது மோதியது. மோதிய வேகத்தில் ஜிபின், செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் துலுக்காத்தம்மன் தெருவைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவரான பாலாஜி (19), அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (28) ஆகிய 3 பேரையும் ராட்சத அலை இழுத்துச் சென்றது.

இதில் சுரேஷ் மட்டும் கரை சேர்ந்தார். மற்ற 2 பேரையும் காணவில்லை.

2 பேர் கதி என்ன?

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மீனவர்கள் விரைந்து சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.

இதற்கிடையே இரவு நேரமானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. முன்னதாக தேடும் பணியை கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் மற்றும் அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர். மாணவர் உள்பட 2 பேரை ராட்சத அலை இழுத்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story