சாதாரண தொண்டன் கூட முதல்-அமைச்சராகும் வாய்ப்பு அ.தி.மு.க.வில் மட்டுமே உள்ளது அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு


சாதாரண தொண்டன் கூட முதல்-அமைச்சராகும் வாய்ப்பு அ.தி.மு.க.வில் மட்டுமே உள்ளது அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
x
தினத்தந்தி 31 Dec 2020 4:42 AM GMT (Updated: 31 Dec 2020 4:42 AM GMT)

சாதாரண தொண்டன் கூட முதல்-அமைச்சராகும் வாய்ப்பு அ.தி.மு.க. வில் மட்டுமே உள்ளது என்று ஆலம்பூண்டியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

செஞ்சி,

செஞ்சி கிழக்கு, மேற்கு, செஞ்சி நகரம் மற்றும் அனந்தபுரம் நகர அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் ஆலம்பூண்டி எம்.ஜி.ஆர். திடலில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் சோழன் வரவேற்றார். செஞ்சி நகர செயலாளர் வெங்கடேசன், அனந்தபுரம் நகர செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

முக்கியமான தேர்தல்

தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக வேண்டும். அதற்காகத்தான் தற்போது நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதத்தில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. ஜெயலலிதா இல்லாமல் சந்திக்கப்போகும் முதல் தேர்தல் ஆகும். இது நமக்கு முக்கியமான தேர்தல். 2026, 2031 ஆகிய ஆண்டுகளிலும் வெற்றி பெறுவோம் ஆனால் அது முக்கியமல்ல. இந்த தேர்தலில் நாம் அயராது பாடுபட்டு வெற்றியை பெற வேண்டும்

எனவே இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு அதை போராடி மீண்டும் பெற்றோம். எனவே சிலர் கட்சியை பிளவுபடுத்த நினைக்கலாம். ஆனால் நீங்கள் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் உண்மையாக ஒற்றுமையாக பாடுபட வேண்டும். சாதாரண தொண்டன் கூட முதல்-அமைச்சராகும் வாய்ப்பு அ.தி.மு.க.வில் மட்டுமே உள்ளது. அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.

வாக்களிக்க தயார்

பூத் கமிட்டியில் இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் அவர்களை அரவணைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.

மக்கள் நமக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். நாம் அவர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமக்கு பிறகு இந்த கட்சியை வழிநடத்த போகிறவர்கள் இப்போதைய இளைஞர்கள். எனவே இளைஞர்-இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள் அயராது உழைக்க வேண்டும். நம்முடைய ஒரே நோக்கம் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக வேண்டும்.

தேர்தல் பணி

கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த கால தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்து, நில அபகரிப்பு ஆகியவைகள் தான் நடந்துள்ளன. தி.மு.க. குடும்ப கட்சி, அதனை மக்கள் ஏற்க மாட்டார்கள். நமது வேட்பாளர் யாராக இருந்தாலும் பரவாயில்லை. நமது நோக்கம் எண்ணம் எல்லாம் நமது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பது தான். எனவே நீங்கள் ஒற்றுமையாக களம் கண்டு இன்று முதல் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் உங்கள் பணியை தொடங்கி தேர்தல் பணியாற்றிட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி செஞ்சி ராமச்சந்திரன், வக்கீல் பிரிவு மாநில துணை செயலாளர் செஞ்சி கதிரவன், மாவட்ட அவைத்தலைவர் கண்ணன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெகதீசன், ஒன்றிய அவைத்தலைவர் மனோகரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் கோவிந்தசாமி, பச்சையப்பன், பேரவை ஒன்றிய செயலாளர் லட்சுமிகாந்தன், பேரவை ஒன்றிய தலைவர் ரங்கநாதன், மாணவரணி ஒன்றிய செயலாளர் நாராயணன், மாவட்ட வக்கீல் அணி துணை செயலாளர் புண்ணியகோட்டி, எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் கணபதி, சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளர் ஷேக் பரான்பாஷா, தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் சரவணன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ரங்கன், கிருஷ்ணன், சக்தி, கனகராஜ், இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் அரிநாத், இளைஞர் பாசறை துணை தலைவர் நரேன் காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story