கள்ளக்குறிச்சி மாவட்ட சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு


கள்ளக்குறிச்சி மாவட்ட சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 31 Dec 2020 4:44 AM GMT (Updated: 31 Dec 2020 4:44 AM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்ட சிவன் கோவில்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி ஸ்ரீசிதம்பரேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதையொட்டி சிதம்பரேஸ்வரர் மற்றும் சிவகாம சுந்தரிஅம்பாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், திருமஞ்சனம், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிதம்பரேஸ்வரர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாண்டுவனேஸ்வரர்

சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் பாலாம்பிகா சமேத பாண்டுவனேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. முன்னதாக ஆனந்த நடராஜருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஆனந்த நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சாமி வீதி உலா நடைபெற்றது. இதே போன்று மஞ்சப்புத்தூர் காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.

கெங்காதீஸ்வரர் கோவில்

சின்னசேலத்தில் காமாட்சி அம்மன் சமேத கெங்காதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தை ஒட்டி ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதையொட்டி ஆலயத்திலுள்ள திருச்சபைக்கு முன்பு நடராஜர், அம்பாள் மற்றும் சுந்தரர் சுவாமிகளுக்கு தேன், இளநீர், எலுமிச்சை, சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம் போன்ற 16 வகையான வாசனை பொருட்களால் அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து பட்டாடை மற்றும் புஷ்ப அலங்காரத்தில் ஆராதனை நடைபெற்றது. சிவ தொண்டர்கள் திருமுறை முற்றோதல் பாட தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சாமி உள்புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Next Story