உயிரிழந்த குழந்தை, தாயின் உடலை அடக்கம் செய்ய முயன்றவர்களை தடுத்து நிறுத்திய போலீஸ் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு


உயிரிழந்த குழந்தை, தாயின் உடலை அடக்கம் செய்ய முயன்றவர்களை தடுத்து நிறுத்திய போலீஸ் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 31 Dec 2020 6:00 AM GMT (Updated: 31 Dec 2020 6:00 AM GMT)

நடுவீரப்பட்டு அருகே உயிரிழந்த குழந்தையுடன், தாயின் உடலை அடக்கம் செய்ய முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையத்து போலீசாரை உறவினர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லிக்குப்பம்,

கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு சி.என்.பாளையத்தை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 30) . கட்டிட தொழிலாளி. இவரது மனைவி அருளரசி (28). இவர்களுக்கு சஞ்சனா (7) என்கிற மகள் உள்ளார். கடந்த 28 நாட்களுக்கு முன்பு அருளரசிக்கு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் கலைவாணன் வழக்கம்போல் காலையில் வேலைக்கு சென்றுவிட்டார். மதியம் சாப்பிடுவதற்கு வீட்டுக்கு வந்தார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டிய நிலையில் இருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் யாரும் திறக்க வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த கலைவாணன் தனது கூரை வீட்டின் மேல் ஏறி கூரையை பிரித்து பார்த்தார். அப்போது அருளரசி தூக்கு மாட்டிய நிலையிலும், குழந்தை அங்கு அசைவற்ற நிலையில் இருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அருளரசி மற்றும் ஆண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தனர்.

முற்றுகை

பின்னர் அவர்களது உடலை நேற்று அடக்கம் செய்ய குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதுபற்றி அறிந்த நடுவீரப்பட்டு போலீசார், விரைந்து சென்று விசாரித்தனர். தொடர்ந்து, 2 பேரின் உடலையும் பிரேத பரிசோதனை செய்த பின்னர் தான் ஒப்படைக்கப்படும் என்று கூறினர். இதற்கு கலைவாணனின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களது சாவில் எந்த மர்மும் இல்லை, எனவே இங்கிருந்து உடலை எடுத்து செல்ல அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்து, போலீசாரை முற்றுகையிட்டனர்.

விசாரணை

இதையடுத்து, பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அருளரசி தூக்குப்போட்டு கொண்டார், எனவே பிரேத பரிசோதனை செய்த பின்னரே அடக்கம் செய்ய வேண்டும் என்று போலீசார் திட்டவட்டமாக தெரிவித்தனர். பின்னர், தாய், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாாத்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஏற்கனவே அருளரசிக்கு ஆண் குழந்தை பிறந்து உடல்நிலை சரியில்லாமல் இறந்ததாகவும், தற்போது ஆண் குழந்தை பிறந்த நிலையில், அதுவும் இறந்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story