பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ரூ.6½ லட்சம் குட்கா பறிமுதல் - டிரைவர் உள்பட 2 பேர் கைது


பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ரூ.6½ லட்சம் குட்கா பறிமுதல் - டிரைவர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 31 Dec 2020 10:54 AM GMT (Updated: 31 Dec 2020 10:54 AM GMT)

பள்ளிகொண்டா சுங்கச்சாவடி பகுதியில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் ரூ.6½ லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அணைக்கட்டு,

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இரவு நேரங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின்பேரில் பள்ளிகொண்டா போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்கு உள்ள சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக அதிகாலை 3 மணிக்கு பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு லாரியை மடக்கி விசாரணை செய்தனர். விசாரணையின்போது லாரி டிரைவர் முன்னுக்குப் பின் முரணான தகவலை கூறியதால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் ஒருவர் பெங்களூரு ஆனந்தபுரம் மைசூர் ரோடு 1-வது மெயின் ரோட்டை சேர்ந்த மாரிமுத்து மகன் இளங்கோவன் (வயது 36) என்பதும் மற்றொருவர் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் சிவராஜ் (26) என்பதும் தெரியவந்தது.

அந்த லாரியில் சோதனையிட்டபோது ரூ.6½ கிலோ புகையிலை மற்றும் குட்கா இருந்தது. இதனை பெங்களூருவில் இருந்து சென்னை மாதவரத்திற்கு கடத்திச் செல்வதாக இருவரும் ஒப்புக்கொண்டனர். அதன் பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சிவராஜ் மற்றும் இளங்கோவன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.அவர்கள் கடத்திய குட்கா மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பள்ளிகொண்டா சோதனை சாவடியில் அடிக்கடி குட்கா பிடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Next Story