அம்மா மினி கிளினிக் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: நாகமரையில் பொதுமக்கள் சாலை மறியல்


அம்மா மினி கிளினிக் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: நாகமரையில் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 31 Dec 2020 1:53 PM GMT (Updated: 31 Dec 2020 1:53 PM GMT)

நாகமரையில் அம்மா மினி கிளினிக்கை இடமாற்றம் செய்வதை கண்டித்து பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள நாகமரையில் அம்மா மினி கிளினிக் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கிளினிக் ஆயத்த பணிகள் முடிவு பெற்று திறப்பு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனிடையே மினி கிளினிக்கை நெருப்பூர் பகுதிக்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முயற்சிப்பதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அம்மா மினி கிளினிக்கை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து நாகமரை-பென்னாகரம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏரியூர் அரசு தலைமை மருத்துவர் முனுசாமி, தாசில்தார் சேதுலிங்கம் மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நாகமரையில் 1,200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு செவிலியர் நியமிக்கப்படாமல் கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவ வசதிக்கு பொதுமக்கள் தவித்து வந்தனர். அம்மா மினி கிளினிக் மூலம் பொதுமக்கள், கர்ப்பிணிகள் சிகிச்சைகள் பெற வசதியாக இருக்கும். எனவே மினி கிளிக்கை இடமாற்றம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தினர்.

அம்மா மினி கிளினிக் நாகமரையில் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் பென்னாகரம்- நாகமரை சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story